அடிப்பட்டாலும் சிங்கம் எப்பவும் சிங்கம்தான் – கிங் கோலியை புகழ்ந்து தள்ளிய எதிரணி கேப்டன்!

0
181

எக்காரணத்திற்காகவும் விராட் கோலியை ஒதுக்கிவிட முடியாது என்று ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டி அளித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியின் ஆட்டம் உச்சத்தில் இருந்து சரிந்துகொண்டே வந்தது. அவரது பார்ம் மிகவும் மோசமாக இருந்ததால் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். சிலர் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று எழுதத் துவங்கினர்.

- Advertisement -

இதற்கு இடையில் விராட் கோலி திடீரென்று யாரும் எதிர்பாராத நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார். இது கூடுதல் பயத்தை ரசிகர்கள் மத்தியில் கிளப்பியது. ஆனாலும் பொறுமை காத்து வந்த விராத் கோலி, தனது ஆட்டத்தை மெருகேற்றிக் கொண்டே வந்தார். மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்புவதற்கு பல முயற்சிகளை எடுத்தார்.

அனைத்திற்கும் பலனாக ஆசியக் கோப்பை தொடரில் அவரது ஆட்டம் அமைந்தது. இந்திய அணிக்கு இது மறக்கக்கூடிய தொடராக இருந்தாலும், விராட் கோலி மீண்டும் பார்மிற்கு திரும்ப இத்தொடரை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். 5 போட்டிகளில் 276 ரன்கள் அடித்து மிகுந்த நம்பிக்கை கொடுத்தார். இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்து மீண்டும் பார்மிற்கு வந்து விட்டேன் என அறிவித்தார்.

டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் டி20 தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுடனும் தலா மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியா வீரர்கள் இந்தியாவிற்கு வந்து விட்டனர்.

- Advertisement -

கேப்டன் ஆரோன் பின்ச், டி20 தொடருக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விராட் கோலி பற்றி கூறிய அவர், “15 ஆண்டுகளாக இந்திய அணிக்கு இன்றியமையாத பங்களிப்பை கொடுத்து விராட் கோலி உச்சத்தில் இருக்கிறார். அவர் தனது சிறந்த ஆட்டத்தில் இருந்தாலும், இல்லை என்றாலும் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதால் அவரை எக்காரணம் கொண்டும் நாங்கள் ஒதுக்கிவிட மாட்டோம். அவருக்கென்று தனித்திட்டங்களை நாங்கள் வகுத்து வருகிறோம். அதன்படி எங்களது தாக்குதல் இருக்கும். இந்திய அணியை வீழ்த்துவதற்கு எங்களது திட்டம் இருந்தால், விராட் கோலிக்கு என்று தனித்திட்டமும் இருக்கிறது.” என பேசினார்.