அப்படி ஒரு பிளேயர வெளில உக்கார வைக்க பாத்தீங்க, இப்போ அவரு இல்லன்னா டீமே இல்லன்னு சொல்ல வச்சிட்டாருல்ல – விராட் கோலியின் புகழ் பாடிய ரிக்கி பாண்டிங்!

0
3199

விமர்சனத்திற்கு செவிசாய்த்து விராட் கோலியை டி20 உலக கோப்பையில் இருந்து வெளியில் அமர்த்தி இருந்தால் இப்போது என்ன நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ரிக்கி பாண்டிங்.

ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பு விராட் கோலியின் பார்ம் மிகவும் மோசமாக இருந்தது. சுமார் 1000 நாட்களுக்கு மேல் சதம் அடிக்க முடியாமல் பல விமர்சனங்களை சந்தித்து வந்தார்.

அதீத அனுபவம் பெற்றிருந்ததால், இந்திய அணி இவரின் மீது நம்பிக்கை வைத்து ஆசிய கோப்பை தொடரில் களம் இறக்கியது. ஒரு அரைசதம் மற்றும் சதம் விலாசி மீண்டும் தனது பழைய பார்மிற்கு திரும்பியதால் மேலும் நம்பிக்கை வைத்து டி20 உலக கோப்பை தொடரிலும் இடம் கொடுத்தது.

டி20 உலக கோப்பை தொடர்க்கும் முன்பு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் நடைபெற்ற டி20 தொடரில் அபாரமாக விளையாடி தனது பார்மை மெருகேற்றிக் கொண்டார். தற்போது அதை டி20 உலககோப்பை தொடரிலும் வெளிப்படுத்தி வருகிறார். 4 போட்டிகளில் மூன்று அரைசதம் அடித்து மூன்றிலும் அவுட் ஆகாமல் இருந்திருக்கிறார்.

விராட் கோலி மீது வந்த பல்வேறு விமர்சனங்களுக்கு செவிசாய்த்து இந்திய அணி நிர்வாகம் அவரை டி20 உலக கோப்பைக்கு எடுக்காமல் இருந்திருந்தால், தற்போது இந்திய அணியின் நிலை எந்த இடத்தில் இருந்திருக்கும் என்று கேள்வி எழுப்பி விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார் ரிக்கி பாண்டிங்.

“இந்தியா-பாகிஸ்தான் போட்டியை எடுத்துக்கொண்டால் விராட் கோலி என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ, அதை சரியாக செய்து மீண்டும் தனது பழைய பார்மிற்கு கொண்டு வந்திருக்கிறார். ஆட்டத்தை வெற்றி பெறும் அளவிற்கு தனது பேட்டிங்கில் நிலைத்து நின்ற பங்களிப்பை கொடுத்து, ஆட்டநாயகனாகவும் வந்திருக்கிறார். ஒரு பார்வையாளராக விராட் கோலி இடம் நான் இதை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

உடனடியாக அவர் மீது அனைத்து பாரங்களையும் வைக்காமல் மெல்ல மெல்ல ஒவ்வொரு போட்டியில் தன்னை உணர வைக்க நேரம் கொடுக்க வேண்டும். இந்திய அணி நிர்வாகம் அதை சரியாக செய்திருக்கிறது. விமர்சனத்திற்கு செவி சாய்க்காமல் விராட் கோலி போன்ற அனுபவம் மிக்க வீரரை தக்க வைத்திருக்கிறது. இதில் ரோகித் சர்மாவிற்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.

பல ஆண்டுகளாக டி20 போட்டிகளை கவனித்து வருவதும், பயிற்சி கொடுத்து வருவதையும் வைத்து நான் உணர்ந்தது என்னவென்றால் டி20 போட்டிகள் அனுபவமிக்க வீரர்களுக்கு தான் சரியாக இருக்கும். இளம் வீரர்கள் ஒரு போட்டிகளில் செயல்பட்டுவிட்டு அப்படியே காணாமல் போய்விடுகிறார்கள். அனுபவிக்க வீரர்கள் தான் எந்த தவறு செய்தோம் எப்படி சரி செய்வது என்று தொடர்ந்து புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள்.” என பேட்டியளித்தார்.