பெண்கள் ஐபிஎல் ; உத்தரப்பிரதேச அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி ; டெல்லி அணியுடன் மோதுகிறது!

0
1125
WPL

இந்திய கிரிக்கெட் வாரியம், ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கான பிரான்சிசைஸ் டி20 லீக் ஐபிஎல் தொடரை 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருவதைப் போல, பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் பிரான்சிசைஸ் டி20 லீக் டபுள்யு.பி.எல் லீக் நடத்தி வருகிறது.

குஜராத், லக்னோ, டெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய ஐந்து இடங்களை தலைமையாகக் கொண்டு 5 அணிகள் உருவாக்கப்பட்டு, முதல் பெண்கள் டபுள்யுபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிபோட்டிக்குத் தகுதி பெறும். இரண்டாவது மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் விளையாடி, அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

இந்த நிலையில் லீக் சுற்றுகளில் முடிவில் முதலிடத்தைப் பிடித்த டெல்லி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இன்று புள்ளி பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்த மும்பை மற்றும் உத்திர பிரதேச அணிகள் இறுதிப் போட்டிக்கான தகுதிப்போட்டியில் மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற உத்தர பிரதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. மும்பை அணியின் ஒரு துவக்க வீராங்கனையான யாசிகா பாட்டியா 21 ரண்களும், மற்றும் ஒரு துவக்க வீராங்கனையான ஹைலி மேத்யூஸ் 26 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த கேப்டன் ஹர்மன் பிரீத்கவுர் 14 ரன்கள், அமலியா கெர் 29 ரன்கள் எடுத்து வெளியேற, இன்னொரு முனையில் பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் வந்த நாட் சிவியர் பிரண்ட் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் ஒன்பது பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 72 ரன்கள் எடுத்து அசத்தினார். இவரது அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை பெண்கள் அணி 182 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து கொஞ்சம் சவாலான இலக்கை நோக்கி களம் இறங்கிய உத்தர பிரதேச அணிக்கு நவிகிரே (27 பந்துகள் 43 ரன்கள்) தவிர வேறு யாரும் சரியான பேட்டிங் பங்களிப்பை செய்யவில்லை.

இந்த நிலையில் மும்பை வேகப்பந்துவீச்சு வீராங்கனை இஸ்ஸி வோங் அபாரமாக பந்துவீசி நவிகிரே, சிம்ரன் சைய்க், எக்கல்ஸ்டன் என மூன்று விக்கட்டுகளை தொடர்ச்சியாக வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் சாதனைப் படைத்தார். பெண்களுக்கான முதல் டபுள்யு.பி.எல் தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் இவருடையது ஆகும்.

முடிவில் 17.3 ஓவரில் 110 ரன்கள் எடுத்து உத்திர பிரதேச அணி சுருண்டது. இதன் மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்று ஞாயிறு மும்பை அணியுடன் மோத இருக்கிறது!