பெண்கள் ஐபிஎல்; பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் ஆனது மும்பை இன்டியன்ஸ்!

0
898
WPL 2023

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு ஐபிஎல் தொடரை நடத்தி வருவது போல, பெண் வீராங்கனைகளைக் கொண்டும் இந்த வருடம் முதல் டபுள்யு.பி.எல் என்று ஐந்து அணிகளை கொண்டு நடத்தியது!

பெண்களுக்கான இந்த முதல் டபிள்யு.பி.எல் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக டெல்லி அணி தகுதி பெற்றது. மற்றும்ஒரு அணியாக, இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி தகுதி பெற்றது.

- Advertisement -

இன்று மும்பை அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே மும்பை ப்ராபோன் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற டெல்லி அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்!

துவக்க வீராங்கனையாக வந்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டெல்லி அணியின் கேப்டனுமான லானிங் 35 ரன்கள் எடுக்க, இந்திய வீராங்கனையான மற்றுமொரு துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்குப் பிறகு டெல்லி அணியின் விக்கட்டுகள் மலமல என்று சரிந்து 16 ஓவர்களில் 79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த நிலையில் 17 வது ஓவரில் ஜோடி சேர்ந்த சிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் இருவரும் 24 பந்துகளுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று தலா இருவரும் 27 ரன்கள் எடுத்து, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணியை 131 ரன்கள் என்ற கவுரவமான நிலைக்கு அழைத்துச் சென்றனர். மும்பை அணியின் ஹைலி மேத்யூஸ் நான்கு ஓவர்கள் பந்து வீசி இரண்டு மெய்டன்கள் செய்து 5 ரன்கள் மட்டுமே விட்டுத்தந்து இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி பவர் பிளேவில் தனது துவக்க வீராங்கனைகள் இருவரையும் இழந்து 27 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கு அடுத்து கேப்டன் ஹர்மன் பிரீத்கவுர் மற்றும் நாட் சிவியர் பிரண்ட் இருவரும் பொறுமையாக விளையாடி அணியை மெல்ல மெல்ல சரிவிலிருந்து மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு வழி வகுத்தது.

இந்த நிலையில் 16.1 ஓவரின் போது சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஹர்மன் பிரீத்கவுர் 39 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு மேல் மும்பை அணிக்கு எந்த விக்கெட் சரிவும் ஏற்படாமல் நாட் சிவியர் பிரண்ட் மற்றும் அமிலியா கெர் இருவரும் பார்த்துக் கொண்டார்கள். 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று, அறிமுக டபிள்யு.பி.எல் டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. நாட் சிவியர் பிரண்ட் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 55 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.