“இந்தியாவுடன் விளையாடும்போது எல்லாம் இதுதான் கதை” – பங்களாதேஷ் கேப்டன் புலம்பல்!

0
8155
Ind vs Ban

இந்த எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் தகுதி சுற்றில் ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை எப்போதும் இல்லாத அளவிற்கு பல திருப்பங்களோடு பரபரப்பாக நடைபெற்று வருகிறது!

இதற்கு தப்பாமல் இன்று இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிய போட்டியும் அமைந்திருக்கிறது. மேகங்கள் சூழ்ந்திருக்க பந்துவீச்சுக்கு சாதகமான நிலையில் பங்களாதேஷ் டாஸ் வென்றது மிகவும் சிறப்பான ஒன்றாக அந்த அணிக்கு இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா சீக்கிரத்தில் வெளியேறவும் செய்தார். ஆனால் கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதங்கள் அடித்து இந்திய அணியை 184 என்ற நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்கள்.

பந்து வீச்சுக்குச் சாதகம் இருந்தும் கோட்டை விட்ட பங்களாதேஷ் அணிக்கு பேட்டிங்கில் துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் மிக அதிரடியாக விளையாடி பெரிய நம்பிக்கையைக் கொடுத்தார். இந்த நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது.

மழைக்குப் பிறகு வந்த பங்களாதேஷ் அணிக்கு எல்லாமே அதிர்ச்சியாக அமைந்தது. கே எல் ராகுல் அடித்த அருமையான த்ரோவால் லிட்டன் தாஸ் வெளியேற அதற்கு அடுத்து வரிசையாக பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் வெளியேற ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

இறுதி ஓவரில் 20 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் பங்களாதேஷ அணி 14 ரன்கள் எடுக்க, இறுதியாக இந்திய அணி ஒருவாறு பங்களாதேஷ் அணியைச் சமாளித்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கான தனது இடத்தை கொஞ்சம் பாதுகாப்பாக்கி கொண்டது .

போட்டி முடிந்து பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் சகிப் அல் அசன்
” இந்தியா அணியுடன் நாங்கள் விளையாடும் போதெல்லாம் இதே கதைதான் நடக்கிறது. வெற்றியை நோக்கி முன்னேறுகிறோம் ஆனால் வெற்றிக்கோட்டை எங்களால் தாண்ட முடிவதில்லை. இது ஒரு சிறந்த ஆட்டம். கூட்டத்தினர் நன்றாக அனுபவித்து பார்த்தார்கள். இரு அணிகளுக்குமே மகிழ்ச்சியான ஒரு ஆட்டமாக இருந்தது. இறுதியில் யாராவது ஒருவர் தோற்க வேண்டும் ஒருவர் வெற்றி பெற வேண்டும். இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது ” என்றவர்…

மேலும் தொடர்ந்து ” லிட்டன் தாஸ்தான் எங்கள் அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவர் தந்த அதிரடியான தொடக்கத்திற்கு பிறகு இந்த இலக்கை துரத்த முடியும் என்று நினைத்தோம். இந்தியாவின் டாப் ஆர்டர்தான் அவர்களது பலம். எனவே டாப் ஆர்டரை விரைவில் வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் டஸ்கின் அகமதுவை தொடர்ந்து பந்து வீச வைத்தேன். ஆனால் இன்று துரதிஷ்ட வசமாக அவருக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. அவர் எங்கள் அணியின் நல்ல பந்துவீச்சாளர். நாங்கள் நேர்மறையாக இருந்து உலகக் கோப்பை தொடரை அனுபவிக்க எண்ணினோம். இது மேலும் தொடரும் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்!