கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் அணியில் எடுப்பீர்களா? – ஹர்திக் பாண்டியா பேட்டி!

0
722

கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் அணி எடுக்குமா? என்ற கேள்விக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பதில் அளித்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

டிசம்பர் மாதம் நடைபெறும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு, வீரர்களை தக்க வைக்கும் மற்றும் வெளியேற்றும் படலம் நடந்து முடிந்திருக்கிறது. நவம்பர் 15 ஆம் தேதி இதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அது முடிவடைந்து 10 அணிகளும் தக்கவைக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட மற்றும் மற்ற அணிகளுடன் ட்ரேட் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 வீரர்களை வெளியேற்றியுள்ளது. இதில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது கேன் வில்லியம்சனின் வெளியேற்றம். அவருக்கு 14 கோடி ரூபாய் சற்று அதிகம் என்று 2 தினங்களுக்கு முன்பு பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வில்லியம்சனை ஏலத்தில் விட்டுவிட்டு 14 கோடிக்கும் குறைவான பணத்தில் எடுத்தால் சரியானதாக இருக்கும் என்றும் அந்த அணி திட்டமிட்டு இருக்கலாம். பஞ்சாப் அணியிலும் கேப்டன் இல்லை என்பதால் கேன் வில்லியம்சன் எடுக்க அந்த அணியும் தீவிரமாக முயற்சிக்கும். மேலும் மிடில் ஆர்டரில் போதிய அனுபவமிக்க வீரர்கள் இல்லாத அணியும் இவரை எடுப்பதற்கு திட்டமிட்டு வருகின்றன.

உலக கோப்பை டி20 தொடர் முடிவுற்ற பிறகு இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது, அதில் கேன் வில்லியம்சினை ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி எடுக்குமா? என்று கேட்கப்பட்டது, இதற்கு பதில் அளித்த அவர்,

“வில்லியம்சனை எடுப்பதற்கு பல அணிகள் முயற்சிக்கும். நிச்சயம் அவரை ஏதேனும் ஒரு அணி எடுத்து விடும். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி எடுக்க முயற்சிக்குமா? என்பது தற்போது கூற இயலாது. இன்னும் அதற்கு ஒரு மாத காலம் இருக்கிறது.

இதற்கு நடுவில் எங்களுக்கு என்ன தேவை என்பதை திட்டமிடுவோம். அதன் பிறகு இது பற்றி முடிவு செய்யப்படும்.” என்றார்.

கேன் வில்லியம்சன் இந்திய மைதானங்களை நன்கு அறிந்தவர் என்பதால் அவரை எடுப்பதற்கு அணிகள் முயற்சிக்கும். மேலும் 10 கோடிக்கும் குறையாமல் ஏலத்தில் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.