ரவீந்திர ஜடேஜாவை வாங்க பேரம் பேசிய அணிகள்; ஜடேஜா வேறு அணிக்கு செல்கிறாரா? நடந்த பேச்சுவார்த்தைகள் என்ன?

0
1316
CSK

உலகின் நம்பர்-1 டி20 கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் தான். இந்த ஐபிஎல் தொடரில் நம்பர்-1 அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். மும்பை அணியை விட ஒரு முறை பட்டத்தை குறைவாக வாங்கி இருந்தாலும், மற்ற எல்லா அணிகளையும் விட அதிக முறை ப்ளே ஆப் சுற்றுக்கு அதிக முறை இறுதிப் போட்டிக்கும் சென்றுள்ள நம்பிக்கையான அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

சென்னை சூப்பர் கிங்ஸின் ஒரே கேப்டனாக மகேந்திர சிங் தோனி தொடர்ந்து 12 வருடங்கள் இருந்து வந்திருக்கிறார். இந்தநிலையில் அவருக்குப் பிறகு அணிக்கு ஒரு கேப்டன் வேண்டும் என்கிற காரணத்துக்காக, கடந்த ஆண்டு ஐபிஎல் சீசன் போது மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து நகர்ந்து கொண்டு, புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா கொண்டுவரப்பட்டார்.

புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா வந்த நேரம் அவருக்கு ஒரு நல்ல ஐபிஎல் சீசனாக இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் அமையவில்லை. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் நிலவிய இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், தீபக் சஹர் மற்றும் அடம் மில்னே காயத்தால் விலகிக்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மட்டும் அல்லாது, அணிக்கு கேப்டனாக வந்திருந்த ரவீந்திர ஜடேஜாவை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது.

இந்த நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பொழுது எதிர்பாராத விதமாக ரவிந்திர ஜடேஜா காயமடைந்தார், அத்தோடு மீண்டும் கேப்டன் பொறுப்பு மகேந்திர சிங் தோனி இடம் கொடுக்கப்பட்டது. மேலும் வெளியேறிய ரவிந்திர ஜடேஜா அதற்குப் பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடாமல் வீட்டிற்கு திரும்பினார்.

ஜடேஜா இப்படி வீடு திரும்பியதற்கு காரணம், கேப்டன் பொறுப்பு பறிப்பு சம்பந்தமாக அணி நிர்வாகம் அவரிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை என்று தகவல் பரவியது. எப்போதும்போல சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அப்படி எதுவும் இல்லை நிலைமை சுமுகமாக இருக்கிறது என்று கூறினார்.

இதற்குப் பிறகு தொடர்ந்து சமூகவலைதளத்தில் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியை பாலோ செய்வதை நிறுத்தினார். மேலும் எல்லாவற்றையும் விட சுயமரியாதை மிகவும் முக்கியம் என்று ஒரு கருத்தையும் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அவர் சிஎஸ்கே அணி நிர்வாகத்தோடு தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு கொண்டு மன விரக்தியில் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்த ஒன்றாக இருந்தது. இப்படியெல்லாம் நடக்கும் போது வழக்கமாக வெளியே வருகின்ற சிஎஸ்கே அணியின் சிஇஓ காசிவிஸ்வநாதன் வழக்கம்போல் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

இப்படியான சமயத்தில் ரவீந்திர ஜடேஜா அவை வெளியில் விட்டுவிட்டு, சிஎஸ்கே அணி இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சாம் கரன் ஆகியோரை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் சென்னை அணி ரவீந்திர ஜடேஜாவை மற்ற அணிக்கு கொடுத்துவிட்டு அந்த அணியில் இருந்து யாரையாவது வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

தற்போது இந்தப் பேச்சுக்கு எல்லாம் ஒரு முடிவு கிடைத்திருக்கிறது. கிரிக்பஸ் தளத்தில் ஜடேஜாவை டெல்லி உட்பட்ட இன்னும் 2 ஐபிஎல் அணிகள் வாங்க விரும்பியதாகவும், அதற்கு சென்னை அணி நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் ரவீந்திர ஜடேஜா வருகின்ற அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவது உறுதி என்றும், ரவீந்திர ஜடேஜா உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்றும் சென்னை அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும் ரவீந்திர ஜடேஜா சென்னை அணி குறித்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.