பும்ரா அடுத்த ஆட்டத்திற்கு வருவாரா? சூரியகுமார் யாதவ் பல கேள்விகளுக்கு கலகலப்பான பதில்!

0
198
Sky

தற்போதைய கிரிக்கெட் உலகத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச்சிறந்த நம்பர் ஒன் வேகப்பந்துவீச்சாளர் என்றால் அது இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராதான். வேகப்பந்துவீச்சாளருக்கு அடிப்படையில் என்னென்ன தகுதிகள் வேண்டுமோ அது அத்தனையும் அதிகமாகவே இருக்கின்ற வேகப்பந்துவீச்சாளர்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்து அடுத்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவிலான தொடர்களிலும் கலந்து கொண்டார். இதற்கு அடுத்து அவருக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் மேற்கொண்டு இந்திய அணி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை.

தற்பொழுது ஆஸ்திரேலிய அணியுடன் நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வந்திருக்கிறார். ஆனால் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து திரும்பி வந்து இருப்பதால் அவருக்கு கூடுதலாக கொஞ்சம் ஓய்வு தருவதற்காக முதல் போட்டியில் அவரை விளையாட வைக்கவில்லை.

பும்ரா விளையாடாத காரணத்தால் சில வருடங்களுக்குப் பிறகு உமேஷ் யாதவ் இந்திய வெள்ளைப் பந்து அணிக்கு திரும்பி விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். ஆனால் இந்திய பந்துவீச்சு துறை மிகவும் பலவீனமாக இருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த போதும் இந்திய பந்துவீச்சாளர்களில் மோசமான செயல்பட்டால் இந்திய அணி தோல்வியை தழுவி வருகிறது.

இதையடுத்து நாளை ஆஸ்திரேலிய அணியுடன் 2வது டி20 போட்டியில் இந்திய அணி மோத இருக்கிறது. இந்த ஆட்டம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பை இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் எதிர்கொண்டார். அப்பொழுது அவரிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. முக்கியமான கேள்வி ஜஸ்பிரித் பும்ரா அடுத்த ஆட்டத்திற்கு வருவாரா என்பதுதான்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ் ” உண்மையில் இது போன்ற தகவல் தொடர்புகள் எனக்கு ஏதும் தெரியாது. இது எனது துறை அல்ல நீங்கள் இதுபற்றி என்னிடம் கேட்கக் கூடாது. இவை பிசியோக்கள் மற்றும் குழு நிர்வாகம் பதில் அளிக்க வேண்டிய விஷயம்” என்று தமாஷாக கூறினார் கூறினார்.

மேலும் அவரிடம் சுழற்பந்தை தாக்கி விளையாடுவதற்கு என்று அவருக்கு தனிப்பட்ட பொறுப்பு ஏதும் இருக்கிறதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் ” நான் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் 2 சிக்சர்கள் அடித்தேன். அதற்காகவும் நான் கிரெடிட் பெறவேண்டும. இது
பற்றி என்ன சொல்வது, நான் பேட்டிங்கில் மிகவும் நெகிழ்வானவன். குறிப்பிட்ட பாத்திரம் என்று எனக்கு எதுவும் கிடையாது. குறிப்பிட்ட சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று நானே முடிவு செய்வேன். நான் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய நெகிழ்வாக இருப்பேன். அந்தந்த இடங்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்று சரியான திட்டங்கள் என்னிடம் எப்பொழுதும் இருக்கும். அதைச் செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று விரிவாக கூறியிருக்கிறார்.