பங்களாதேஷ்-க்கு ஃபாலோ-ஆன் கொடுக்காம, இந்தியா பேட்டிங் செய்தது ஏன்? – கேஎல் ராகுல் விளக்கம்!

0
408

ஃபாலோ-ஆன் செய்யாமல் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது ஏன் என்று விளக்கம் அளித்திருக்கிறார் கேப்டன் கே எல் ராகுல்.

வங்கதேசம்-இந்தியா அணிகள் மோதிய முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 404 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வங்கதேசம் அணி 150 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

254 ரன்கள் முன்னிலையில் இருந்தது இந்தியா. பங்களாதேஷ் அணிக்கு ஃபாலோ-ஆன் கொடுத்து இன்னிங்ஸ் வெற்றியை பெறுவதற்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் கேஎல் ராகுல் அதை செய்யாமல் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்யும் என முடிவெடுத்தார்.

2வது இன்னிங்சில் சுப்மன் கில்(110) மற்றும் புஜாரா(102*) இருவரும் சதம் அடிக்க, 258/2 என இருந்தபோது, இந்தியா மொத்தம் 512 ரன்கள் முன்னிலையில் பெற்றிருந்தது. அப்போது கேஎல் ராகுல் டிக்ளர் செய்வதாக அறிவித்தார்.

513 ரன்கள் இலக்கை துரத்திய வங்கதேசம் அணிக்கு துவக்க வீரர்கள் சான்டோ(67), ஜாகீர்(100) நன்றாக போராடினர். பின்னர் கேப்டன் சாகிப் அல் ஹசன் (84) சிறிது நம்பிக்கை கொடுக்க, 2வது இன்னிங்சில் வங்கதேசம் அணி 324 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றது.

- Advertisement -

போட்டி முடிந்தபின் பேட்டியளித்த கேஎல் ராகுல், ஏன் ஃபாலோ-ஆன் கொடுக்காமல், தொடர்ந்து நாங்கள் பேட்டிங் செய்தோம்? என பதில் கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது:

“பலரும் இந்த கேள்வியை கேட்கிறார்கள். ஏன் பாலோ-ஆன் செய்யவில்லை? என்று. அப்போது மைதானம் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இருந்தது. ஒருவேளை பாலோ-ஆன் செய்து, அவர்கள் பேட்டிங்கில் நல்ல ஸ்கோரை எட்டி இருந்தால், இந்தியாவிற்கு சிக்கலாக மாறியிருக்கலாம். ஏனெனில் 5ம் நாள் பவுலிங் செய்ய மைதானம் நன்றாக இருந்தது. மேலும் நாட்களைக் கடத்தி, இந்தியாவிற்கு பேட்டிங் செய்ய போதிய நேரத்தை கொடுக்கவில்லை என்றால் அதுவும் வெற்றி பெறுவதற்கு சிக்கலாக மாறி இருக்கும்.

இவற்றை கருத்தில் கொண்டு நாங்கள் பேட்டிங் செய்து இன்னும் அதிக ஸ்கோரை எட்டி, மிகப்பெரிய இலக்கை அவர்கள்முன் வைக்கும்பொழுது, சிக்கல் ஏற்பட்டு பதட்டத்தில் விக்கெட்டுகளை இழக்க முற்படுவர். அதேநேரம் இலக்கை எட்டுவது கடினம். ஆகையால் தடுப்பாட்டம் விளையாடலாம் என முயற்சித்து சில தவறுகளையும் செய்வார். அது இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என்பதன் அடிப்படையில் தான் ஃபாலோ- ஆன் செய்யாமல் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்வதற்கு நாங்கள் முடிவு செய்தோம்.” என்றார்.

மேலும் பேசிய கேஎல் ராகுல், “ஒருநாள் போட்டியில் செய்த தவறை டெஸ்ட் போட்டிகளில் செய்யாமல் நன்றாக விளையாடினோம். முதல் மூன்று நாட்கள் மைதானம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் ஸ்லோவாக இருந்தது. அதைத்தொடர்ந்து நான்காவது நாள் நன்றாக பேட்டிங் செய்ய மைதானம் சாதகமாக இருந்ததால், வங்கதேசம் துவக்க வீரர்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். அது மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. ஆனாலும் இந்திய அணியின் பவுலர்கள் தங்களது தாக்குதலை சுனக்கம் காட்டாமல் தொடர்ந்து நடத்தினர். அதன் பலனாக இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா மற்றும் கில் இருவரும் கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொண்டு சதம் அடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பார்ம் இரண்டாவது போட்டியிலும் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். வங்கதேசம் அணி எளிதான அணி இல்லை என்று பலமுறை நான் கூறியிருக்கிறேன். அதற்கேற்றார் போல அவர்களும் ஈடு கொடுத்தார்கள். ஒருநாள் தொடரை வென்று காட்டி இருக்கிறார்கள். அதுவும் எளிதல்ல. நாளுக்கு நாள் அவர்களின் வளர்ச்சியை பார்க்கும் பொழுது மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே பலத்தப்போட்டி நிலவும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

(ரோகித் சர்மா 2வது டெஸ்டில் இருப்பாரா?) இதைப்பற்றி அணி நிர்வாகம் மற்றும் மருத்துவக் குழுவினர்தான் தெரிவிக்க வேண்டும். நானும் அவரது மருத்துவ அறிக்கையை பின் தொடர்ந்து வருகிறேன். விரைவில் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்ப்பு எனக்கும் ரசிகர்களைப் போலவே இருக்கிறது. வரவேண்டும்.” என்றார்.