முதல் 2 போட்டிகளில் இல்லாமல், 3வது ஒருநாள் போட்டியில் சூரியகுமாருக்கு இடம் கொடுத்து ஏன்? – ரோகித் சர்மா விளக்கம்!

0
1695

மூன்றாவது ஒருநாள் போட்டியில் சூரியகுமார் யாதவிற்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணத்தை ரோகித் சர்மா விளக்கியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி டி20 தொடரை முடித்துவிட்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கௌதாத்தி மற்றும் கொல்கத்தா மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி 67 ரன்கள் மற்றும் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசங்கள் முறையே வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெறுகிறது. ஆறுதல் வெற்றியை பெருவதற்கு இலங்கை அணியும், 50 ஓவர் உலகைகோப்பையை குறிக்கோளாகக் கொண்டு ஒருநாள் தொடர்களில் விளையாடி வரும் இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யவும் முனைப்புடன் காத்திருக்கின்றன.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. இதற்கான காரணத்தை ரோகித் சர்மா கூறிய போது, “மைதானம் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கிறது. அத்துடன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிறைய ஸ்கோர் செய்து நம்பிக்கை வளர்த்துக் கொள்வதற்கு இது போன்ற போட்டிகள் உதவும்.” என்றார்.

முதல் இரண்டு போட்டிகளில் சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்படவில்லை. மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு அவர் பிளேயிங் லெவனில் எடுத்துவரப்பட்டிருக்கிறார். இதற்கான காரணத்தை கூறிய போது, “ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டும் செய்து வருகிறார். இதுபோன்ற போட்டிகளில் அவருக்கு ஓய்வு கொடுத்து ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதேபோல் வேகம் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் சமீபகாலமாக முக்கிய பங்காற்றி வருகிறார். அவருக்கும் ஓய்வு முக்கியம் என்பதால் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூரியகுமார் யாதவ் மற்றும் உம்ரான் மாலிக் இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் இருவரும் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கின்றனர்.

டாப் ஆர்டரில் இருக்கும் பேட்ஸ்மென்களும் நன்றாக செயல்பட்டு வருகின்றனர். அணியில் நன்றாக விளையாடி வருபவர்களை எந்த காரணத்திற்காக வெளியே எடுக்க முடியும். மேலும் 50 ஓவர் போட்டிகள் என்பது நீண்ட பார்மட், டி20 போட்டிகள் போல அல்ல. சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் பெஞ்சில் இருப்பது, இந்திய அணி எத்தகைய பலம் மிக்கது என்பதையும் உணர்த்துகிறது.” என்றார்.