ஜிம்பாப்வே தொடருக்கு திடீரென ஏன் கேப்டனை மாற்ற வேண்டும்? – ஆகாஷ் சோப்ரா கேள்வி!

0
102
Aakash chopra

இந்திய அணி அயர்லாந்து இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் என தொடர் சுற்றுப் பயணங்களை முடித்துக்கொண்டு ஆகஸ்டு இருபத்தி ஏழாம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்டில் தொடங்கும் ஆசிய கோப்பை தொடருக்காக தயார் நிலையில் இருக்கிறது!

இதற்கு நடுவில் ஆகஸ்ட் 18 20 22 ஆகிய தேதிகளில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட ஒரு இந்திய அணி ஜிம்பாப்வே செல்கிறது. இதற்கென ஷிகர் தவான் தலைமையில் இளம் இந்திய வீரர்களை உள்ளடக்கிய ஒரு அணி அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

முதலில் அறிவிக்கப்பட்ட இந்த அணியில் குடலிறக்க பிரச்சனையால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு திரும்பி பின்பு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து வெளியேறிய கேஎல் ராகுல் சேர்க்கப்படவில்லை.

ஆனால் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென்று ஜிம்பாப்வே தொடருக்கு கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டார். சேர்க்கப்பட்டதோடு அவரை ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் இந்திய அணி நிர்வாகம் அறிவித்தது. ஷிகர் தவானை துணை கேப்டனாக அறிவித்தது.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷிகர் தவானுக்கு இந்திய டி20 அணியில் இடம் தரப்படுவதில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு ஷிகர் தவான் ஒதுக்கப்பட்டார். ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். ஒருநாள் தொடர்களில் நட்சத்திர வீரர்கள் விளையாடாமல் போகும் பொழுது அந்த அணிக்கு ஷிகர் தவான் தான் தலைமை தாங்குகிறார். இப்படியிருக்க கேஎல் ராகுலை திடீரென்று அணியில் நுழைத்து ஷிகர் தவானை கீழிறக்கி கேப்டன் ஆக்கியது சமூக வலைதளங்களில் சிறு விவாதங்களை உருவாக்கியிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தற்போது தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் ” இது என் கையில் இருந்திருந்தால் நான் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன். இதை நான் தவிர்த்து இருப்பேன். கேஎல் ராகுல் ஆசிய கோப்பை அணியில் தான் இருந்தார். ஏற்கனவே இந்திய அணிக்கு 8, 9 கேப்டன்கள் இருக்கிறார்கள். ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இந்திய கேப்டன் பொறுப்பிற்கு வெகுதொலைவில் இருக்கிறார்கள் என்று நான் கருதவில்லை. ஜஸ்பிரிட் பும்ரா வரை கேப்டனாக இருந்துள்ளார். எப்படி இருக்க ஷிகர் தவானை திடீரென்று மாற்றி இருக்கத் தேவையில்லை” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஷிகர் தவான் ஒரு மூத்த வீரர் அவர் தொடர்ந்து கேப்டனாக இருந்து இருக்க வேண்டும். ராகுல் பேட்ஸ்மேனாக இருந்திருக்க வேண்டும். அது ஒரு பெரிய விஷயமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை ” என்றும் கூறியிருக்கிறார்!