மழையில் ஏன் போட்டி நடத்தனும்?காரணம் வீரர்களா இருக்கலாம்.. விடக்கூடாது.. உண்மையை கண்டுபிடிக்கனும் – கவாஸ்கர் திடீர் போர்க்கொடி!

0
248
Gavaskar

ஆறு ஆசிய அணிகள் பங்கு பெறும், ஒரே ஒரு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், பல பிரச்சனைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடர்களில் இந்த அளவிற்கு சர்ச்சைகளைக் கொண்டிருந்த ஆசியக் கோப்பை தொடர் வேறு எதுவும் இருக்காது!

இந்த முறை ஆசியக் கோப்பை நடத்துவதற்கான உரிமையை பாகிஸ்தான் வைத்திருந்தது. ஆனால் அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அரசு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வதை அனுமதிக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இறுதியாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் ஆசிய கோப்பை தொடரை நடத்துவதற்கு ஒருவழியாக சம்மதம் பெற்றது.

இத்தோடு பிரச்சினைகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் இதற்குப் பின்புதான் பிரச்சனைகள் அதிகமானது. காரணம் பாகிஸ்தானுக்கு அடுத்து போட்டியை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் மழை பிரச்சனையை முடிய விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

மழை முன்னறிவிப்பு தெரிந்தும், கொழும்புவில் போட்டியை நடத்தாமல், இலங்கைக்குள் மற்றும் ஒரு மைதானமான ஹம்பன்தோட்டாவில் போட்டியை மாற்றாதது சர்ச்சையாகி வருகிறது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் உலாவி வருகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் இது பற்றி புதிய சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார். அவர் கூறும் பொழுது “ஏன் ஹம்பன்தோட்டாவுக்கு போட்டிகள் செல்லாமல், கொழும்புவில் நடக்கிறது என்று யாராவது கண்டுபிடிக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அங்கு சென்று விளையாட வீரர்கள் விரும்பாதது போல் தெரிகிறது.

எனவே கொழும்புவில் பகடை மாதிரியான நிலையற்ற வானிலை இருப்பது தெரிந்தும், போட்டியை மாற்றாமல் தொடர்ந்து கொலும்புவிலேயே வைத்திருக்கிறார்கள். நான் சில வீரர்கள் என்று சொன்னது குறிப்பிட்ட வீரர்களையோ அல்லது குறிப்பிட்ட அணியின் வீரர்களையோ சொல்லவில்லை. அங்கு இருந்திருக்க வேண்டிய அனைத்து அணிகளின் வீரர்களையும் சொல்கிறேன்.

வெளிப்படையாக வீரர்கள் நல்ல மனநிலையில் போட்டிக்கு முன்பாக இருக்க வேண்டும். இதற்கு உடற்பயிற்சி வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் நாம் இது போன்ற நேரத்தில் பெரிய விஷயத்தை பார்க்க வேண்டும். ஹம்பன்தோட்டாவில் மழை வாய்ப்பு குறைவாக இருக்கிறது. கொழும்புவில் மழை வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே இதில் இதைத்தான் பார்த்திருக்க வேண்டும்!” எனக் கூறியிருக்கிறார்!