ஹார்திக் பாண்டியாவை களமிறக்க வேண்டிய நேரத்தில், அக்ஸர் பட்டேலை களமிறக்க வேண்டிய அவசியம் என்ன? – ரோகித் சர்மா கொடுத்த தெளிவான விளக்கம்!

0
7009

மூன்று விக்கெட்டுகளை இழந்த பிறகு ஹர்திக் பாண்டியாவை களமிறக்க வேண்டிய நேரத்தில் எதற்காக அக்சர் பட்டேலை களம் இறக்கச் செய்தேன் என்று விளக்கம் அளித்திருக்கிறார் ரோகித் சர்மா.

பரபரப்பாக சூப்பர் 12 சுற்றில் நடந்து முடிந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக பந்து வீசிய அர்ஷதீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்திருந்தனர்.

- Advertisement -

சற்று சிக்கலான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தலா நான்கு ரன்கள் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகிவிட்டனர். தொடர்ந்து நம்பிக்கை அளித்து வந்த சூரியகுமார் யாதவ் போட்டியில் பௌண்டரியுடன் துவங்கினார். ஆனால் அவரும் நீடித்து நிற்கவில்லை. 

சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 15 ரன்கள் அடித்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். 5.3 ஓவர்களில் 26 ரன்களுக்கு மூன்று விக்கெடுகளை இழந்து இந்திய அணி திணறி வந்தது. அதற்கு அடுத்ததாக ஹர்திக் பாண்டியா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போது திடீரென அக்ஷர் பட்டேல் களம் இறக்கி விடப்பட்டார். ரோகித் சர்மாவின் இந்த முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

துரதிஷ்டவசமாக அவரும் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடி 113 ரன்கள் சேர்த்தது மிகப் பெரிய நம்பிக்கையை இந்திய அணிக்கு கொடுத்தது. 

- Advertisement -

37 பந்துகளில் 40 ரன்கள் அடித்திருந்தபோது ஹர்திக் பாண்டியா 19வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 5 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இறுதிவரை களத்தில் நின்று விராத் கோலி அதை நன்றாக முடித்துக் கொடுத்தார். இவர் 53 பந்துகளில் 82 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா, எதற்காக ஹர்திக் பாண்டியாவிற்கு முன்னர் அக்சர் பட்டேலை களமிறக்கினேன் என்று தெளிவாக விளக்கம் அளித்தார்.

“பவர்-பிளே ஓவர்களில் நான், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆட்டம் இழந்த பிறகு, பவுன்ஸ், ஸ்விங் அதிகமாக இருந்தது. அந்த சமயத்தில் உடனடியாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை களமிறக்கி சிக்கலில் உண்டாக்க வேண்டாம் என நினைத்தேன். மேலும் நிச்சயம் இரண்டு ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். அவர்களின் எட்டு ஓவர்கள் இருக்கிறது அப்போது அக்சர் பட்டேல் களமிறங்கினால் சற்று அதிரடியாக விளையாடும் பொழுது இந்திய அணிக்கு ரன் சேரும் என்று நினைத்தேன். 

மேலும் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் எதிரணிக்கு கூடுதல் சிக்கலை உண்டாக்கலாம் என்றும் கணித்து வந்தேன். அதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவிற்கு முன்னர் அக்சரை களமிறக்கி ஆடவைத்தேன். துரதிஷ்டவசமாக முதல் ஓவரில் அவர் ஆட்டம் இழந்துவிட்டார். அதன்பிறகு பதட்டமான சூழலில் விராட் கோலி மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் அணியை எடுத்துச் சென்ற விதம் உலகத் தரம். விராட் கோலி பல சதங்களை அடித்திருந்தாலும் அவரது இத்தனை வருட கிரிக்கெட் வாழ்வில் இதுதான் சிறந்த பேட்டிங் என்று தயங்காமல் கூறுவேன்.” என்றார்.