கடைசி ஓவர் ரிஷப் பண்ட்டை ஆடவைத்திருப்பேன், ஆனால் தினேஷ் கார்த்திக்கை வரவைத்தது இதற்காக தான் – ரோகித் சர்மா கொடுத்த பதில்!

0
77159

கடைசி ஓவரில் ரிஷப் பண்ட்டை வெளியில் வைத்து விட்டு தினேஷ் கார்த்திக்கை உள்ளே வர வைத்ததற்கு முக்கிய காரணம் இதுதான் என்று தனது பேட்டியில் பதில் அளித்துள்ளார் ரோகித் சர்மா.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்திருக்கிறது. டி20 தொடரின் முதல் போட்டி மொகாலியில் நடந்தது. அதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது. 0-1 என தொடரில் பின்தங்கியது.

இரண்டாவது போட்டி நாக்பூரில் நடந்தது. மழையால் ஆட்டம் தாமதமானதால், தலா 8 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்டபடி, உமேஷ் யாதவ் வெளியே உட்காரவைக்கப்பட்டு பும்ரா உள்ளே எடுத்துவரப்பட்டார். குறைந்த ஓவர் போட்டி ஆதலால், புவி வெளியே பண்ட் உள்ளே என்ற மற்றொரு மாற்றமும் செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா அணிக்காக களமிறங்கிய துவக்க ஜோடியில் கேமரூன் கிரீனை(5) அக்சர் படேல் ரன் அவுட் செய்தார். மேலும் மேக்ஸ்வெல்(0) மற்றும் டிம் டேவிட்(2) இருவரையும் அக்சர் படேல் கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 15 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் 19 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுக்க, 8 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 90 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி 6 பந்துகளில் 11 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த சூரியகுமார் முதல் பந்திலேயே வெளியேறினார். இவர்கள் மூன்று பெரும் ஆடம் ஜாம்பாவின் சுழலில் அவுட் ஆகினர்.

ஆனால் ஒரு முனையில் விக்கெட் கொடுக்காமல் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிலிருந்து பந்துகள் சிக்ஸர்களாக பறந்தது. 20 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46 ரன்கள் எடுக்க, ஹர்திக் பாண்டியா(9) ஆட்டம் இழந்து வெளியேறினார். உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் 8வது ஓவரை சந்தித்தார். 6 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என அடுத்தடுத்து அடித்து 19.2 ஓவர்களில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். இதையடுத்து இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த ரோகித் சர்மா கூறுகையில், “இன்றைய போட்டியிலும் நான் எனது வழக்கமான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தினேன். கடந்த 8 முதல் 9 மாத காலம் இதைத்தான் நான் செய்து வருகிறேன். இன்று தான் அது வேலை செய்திருப்பதாக பலரும் பேசுகிறார்கள். இது குறைந்த ஓவர்கள் போட்டி. அதனால் எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இன்றைய போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினர். முதல் இன்னிங்ஸ் முடியும் தருவாயில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. அதனால் தான் ஹர்ஷல் பட்டேல் பந்தில் பவுண்டரிகள் சென்றது.

அக்சர் பட்டேல் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். எந்த ஒரு போட்டியிலும் அவர் தன்னை தனித்துவமாக காட்டிக் கொள்கிறார். ஆகையால் அவரை பவர்-பிளே ஓவரில் பயன்படுத்தி, மற்ற பந்துவீச்சாளர்களை என்னால் மிடில் ஓவர்களில் எளிதாக பயன்படுத்திவிட முடிகிறது. இறுதியாக தினேஷ் கார்த்திக் விளையாடுவதற்கு சில பந்துகள் கிடைத்தது. ரிஷப் பண்ட்டை அந்த இடத்தில் களமிறக்க வேண்டும் என்று பலரும் பேசுகின்றனர். பந்துவீச்சாளர் டேனியல் சாம்ஸ். அவர் ஆஃப்-கட் பந்தை அதிகமாக வீசுவார். அதை எதிர்கொள்வதற்கு தினேஷ் கார்த்திக் சிறப்பான வீரராக இருப்பார். ஆகையால் அவரை களம் இறக்கினேன்.” என்று பதில் அளித்தார்.