மேன் ஆப் தி மேட்ச் வாங்குன குல்தீப் யாதவ், பிளேயிங் லெவன்ல இருந்து தூக்க என்ன காரணம்? – முன்னாள் வீரர் சாடல்!

0
642

சென்ற போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவை, எதன் அடிப்படையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் வீரர் தொட்டா கணேஷ்.

வங்கதேசம் அணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர் குல்தீப் யாதவ்.

முதலில் இன்னிங்ஸில் அஸ்வினுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து 40 ரன்கள் அடித்தார். அதே இன்னிங்சில் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் முக்கியமான கட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தம் 40 ரன்கள் மற்றும் எட்டு விக்கெட் என ஆல்ரவுண்டர் செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

வங்கதேசம்-இந்தியா அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் எடுக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜெயதேவ் உனட்கட் எடுக்கப்பட்டிருக்கிறார்.

ஏன் ஒவ்வொரு முறையும் குல்தீப் யாதவ் நன்றாக செயல்பட்ட பிறகும் உடனடியாக அணியில் இருந்து வெளியில் அமர்த்தப்படுகிறார்? என கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் வீரர் தொட்டா கணேஷ். அவர் கேள்வி எழுப்பியதாவது:

“குல்தீப் யாதவருக்கு இப்படி அடிக்கடி நடப்பது பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த தருணத்தில் அவருடன் யாராவது இருந்தால் தோள் கொடுத்து ஆறுதல் கூறுங்கள். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எடுக்காதது நிச்சயம் அவருக்கு மன வேதனையை கொடுத்திருக்கும்.

இந்திய அணி நிர்வாகம், எதன் அடிப்படையில் எத்தகைய முடிவுகளை எடுக்கிறது? இதற்கு முன்னர் கருண் நாயர் 300 ரன்கள் அடித்தபோது, அவரையும் அடுத்த போட்டியில் வெளியில் அமர்த்தினார்கள். தற்போது குல்தீப் யாதவையும் அதேபோன்று ஒருவராக மாற்றி வருகிறார்கள். நன்றாக செயல்பட்ட பிறகும் அவரை வெளியில் அமர்த்துவது எந்த வகையில் நியாயம்? விமர்சனங்கள் வரும் என்பதை பற்றி கவலையே கொள்ளாமல் இப்படி அணி நிர்வாகம் செய்து வருவது நியாயமற்ற செயல்.” என்றார்.