“கேமரூன் கிரீனை இவ்வளவு காசு கொடுத்து ஏன் எடுத்தோம்? ” – ஆகாஷ் அம்பானி விளக்கம்!

0
420
MI

ஐபிஎல் மினி ஏலம் ஒருவாறாக முடிந்திருக்கிறது. இந்த மினி ஏலத்தில் சில அணிகளுக்கு சில வீரர்கள் குறைவான விலையிலும் சில வீரர்கள் அதிகப்படியான விலையிலும் கிடைத்திருக்கிறார்கள்!

மேலும் இந்த ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் இரண்டு அதிகபட்ச வீரர்களுக்கான விலைகள் பதிவாகி இருக்கின்றன!

இங்கிலாந்து இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இளம் வீரர் சாம் கரனை 18.50 கோடிக்கு பஞ்சாப் வாங்கி இருக்கிறது. இவர் முதன் முதலில் ஐபிஎல் விளையாடியது பஞ்சாப் அணிக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது!

இதற்கு அடுத்து ஆஸ்திரேலிய வலது கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இளம் வீரர் கேமரூன் கிரீனை 17.50 கோடிக்கு மும்பை அணி வாங்கி இருக்கிறது.

இதற்கு முன்பு தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிரீஸ் மோரிசை ராஜஸ்தான் அணி 16.25 கோடிக்கு வாங்கி இருந்ததுதான் அதிகபட்ச விலையாக பதிவாகி இருந்தது. தற்பொழுது இதைத் தாண்டி இருவீரர்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 16.25 கோடிக்கு சென்னை அணி பென் ஸ்டோக்சை வாங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது!

டி20 கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் இல்லாத ஆஸ்திரேலியா வலது கை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியது ஏன் என்று மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி சில முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்!

இதுகுறித்து ஆகாஷ் அம்பானி கூறும் பொழுது ” நாங்கள் நிறைய அனுபவம் கொண்ட நிறைய வீரர்களை அணிக்குள் தக்க வைத்திருக்கிறோம். எங்களுக்கு தேவை நீண்ட ஆண்டுகளுக்கு எங்கள் அணிக்கு விளையாட முடிந்த இளம் வீரர்கள்தான். இந்த காரணத்தால் தான் நாங்கள் கேமரூன் கிரீனுக்கு இந்த தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தோம்!” என்று கூறியிருக்கிறார்!