தோனி ஏன் அந்த இறுதி ஓவரை ஜோகிந்தர் சர்மாவிடம் கொடுத்தார்? – ஸ்ரீசாந்த் ஆச்சரியப்படத்தக்க புதிய தகவல்!

0
4336
MSD

மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய இளம் படை 2007ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையை வென்று நாளையோடு 15 வருடங்கள் ஆகிறது. தற்போது இதை ஒட்டி அந்த அந்த உலகக் கோப்பை வெற்றி குறித்து முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்!

2007ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான அந்த உலகக் கோப்பை வெற்றி என்பது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய ஒரு விஷயமாகும். அதே ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டி உலக கோப்பையில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து முதல் சுற்றோடு வெளியேறி, ரசிகர்கள் வீரர்களின் வீட்டை தாக்க்கும் அளவிற்கு போயிருந்தது. இப்படியான ஒரு நிலையை அதே ஆண்டு இந்த வெற்றி மாற்றி அமைத்தது.

மேலும் இதற்கு அடுத்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் போட்டி தொடரான ஐபிஎல் தொடரை கொண்டுவந்தது. 2007ஆம் ஆண்டு கிடைத்த 20 ஓவர் போட்டி உலகக் கோப்பை வெற்றி, 20 ஓவர் கிரிக்கெட் பற்றி இந்திய ரசிகர்களிடையே நிறைய அறிமுகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த கிரிக்கெட் முறை இந்தியாவின் குக்கிராமங்கள் வரை பரவியிருந்தது.

இந்த உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஓவரில் தோனி ஜோகிந்தர் சர்மாவை பந்துவீச அழைத்து, மிஸ்பா உல் ஹக் அதை பின்புறம் அடித்து, அதை ஸ்ரீசாந்த் கேட்ச் பிடித்ததுவரை இன்று எல்லாமே ஒரு சரித்திரமாக மாறி இருக்கிறது. இந்த இறுதி ஓவரை தோனி ஏன் ஜோகிந்தர் சிங்கிடம் கொடுத்தார் என்கின்ற தகவலை ஸ்ரீசாந்த் தற்போது பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறும்போது “நாங்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் அணிக்காக விளையாடினோம் என்பது பலருக்கும் தெரியாது. நான், யுவி பா, பஜ்ஜு பா, தோனி பாய் எல்லோரும் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். ஜோகிந்தர் சர்மா ஓஎன்ஜிசி அணிக்காக விளையாடினார். இந்த அணிகளுக்காக நாங்கள் டெல்லி மற்றும் பிற இடங்களில் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறோம்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ஜோகிந்தர் பாயின் வெற்றி குறித்த மனப்பான்மை பற்றி தோனி பாய்க்கு நன்றாகவே தெரியும். மேலும் இப்படி ஜோகி பாய் ஒருமுறை இரண்டு முறையல்ல பலமுறை செய்திருக்கிறார் என்றும் தோனி பாய்க்கு தெரியும். இதனால் அவர் மீது தோனிக்கு அதிக நம்பிக்கை இருந்தது ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் இன்னும் விளக்கமாக பேசியவர்
” சிறந்த கேப்டன் யார்? தனிநபர்களுடன் பணியாற்றுவார்கள். வீரர்கள் தங்களை நம்பாத போதும் அவர்கள் வீரர்களை நம்புவார்கள். சிறந்த கேப்டன் உங்களிடம் வந்து உங்களைப் பற்றி கூறி நம்பிக்கை வர வைப்பார். எனவே இதனால் ஜோகி பாய் இடம் தோனி பாய் பந்தை கொடுத்தது என்னை ஆச்சரியப் படுத்தவில்லை. தோனி பாய் எடுக்கும் எந்த முடிவுகளும் வெற்றிகரமானது என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். அது நிறைவேற வேண்டும் என்று நான் மனதுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டேன் ” என்று கூறியிருக்கிறார்.