அடுத்த போட்டியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? – வெற்றிக்குப் பிறகு ரோகித் சர்மா பேச்சு!

0
2886
Rohit sharma

இந்தியா வந்துள்ள இலங்கை அணி உடன் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வென்று தொடரில் முன்னிலை பெற்று இருந்தது!

இந்த நிலையில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இலங்கை அணியில் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் நுவனிது பெர்னாடோ அறிமுகமானார். அத்தோடு அவர் அரைசதமும் அடித்து அசத்தினார். மற்ற யாரும் பெரிதாக இலங்கை அணியில் பேட்டிங்கில் செயல்படாததால் இலங்கை அணி 215 ரன்கள் ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா கில் மற்றும் விராட் கோலி மூவரும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. ஸ்ரேயாஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா சுமாரான ஒத்துழைப்பை கே.எல். ராகுலுக்கு தர, அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அரை சதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக குல்தீப் அறிவிக்கப்பட்டார்!

வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா
“இது மிகவும் நெருக்கமான ஆட்டம். இப்படியான ஆட்டம் உங்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. கே எல் ராகுல் பேட்டிங்கில் ஐந்தாம் இடத்தில் நிறைய போட்டிகளில் விளையாடுகிறார். நிறைய அனுபவம் கொண்ட ஒரு வீரர் இந்த இடத்தில் விளையாடுவது அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. அவரது நல்ல பேட்ஸ்மேன்ஷிப்பை இந்த ஆட்டம் காட்டியது” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” பின்னோக்கிப் பார்த்தால் எங்களின் டாப் பார்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருப்பது நல்லது தான். ஆனால் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்ட வலது கை பேட்ஸ்மேன்கள் கடந்த ஒரு வருடத்தில் நிறைய ரன்களை அடித்திருக்கிறார்கள். நாங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேனை விரும்பினாலும் எங்கள் அணியின் வலது கை பேட்ஸ்மேன்களின் தரம் திறமை பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று தெரிவித்தார்!

அடுத்த ஆட்டத்தில் யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்து பேசும்பொழுது ” அடுத்த ஆட்டத்திற்கான ஆடுகளம் எப்படிப்பட்டது என்று முதலில் பார்ப்போம். மேலும் மற்றொரு ஒருநாள் போட்டி தொடரும் வரவுள்ளது. எனவே ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டியது இருக்குமா என்று பார்ப்போம். குல்தீப் இப்போது வந்து நல்ல திருப்புமுனைகளை உருவாக்குகிறார். அவர் தனது பந்துவீச்சில் இப்பொழுது மிக நல்ல நம்பிக்கையோடு இருக்கிறார். இது அணிக்கு மிகவும் நல்லது” என்று தெரிவித்திருக்கிறார்!