டி20 உலகக் கோப்பையில் பும்ரா இடத்திற்கு யார் சரியானவர்? யாருக்கு வாய்ப்புகள் அதிகம்?

0
88
T20i wc

ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இருந்து, முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வெளியேறி இருக்கிறார்!

தற்கால கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவரால் ஆட்டத்தின் எந்தப் பகுதியிலும் பந்துவீச முடியும். வேகப்பந்து வீச்சில் எல்லா வகையான பந்துகளும் இவரின் கைகளில் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வீரர் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் இடம் பெற முடியாமல் போவது அணிக்கு இழப்புதான். தற்பொழுது ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை இந்திய அணியில் நிரப்பக்கூடிய வீரராக யார் இருப்பார்? வேகமும் எகிறும் தன்மையும் கொண்ட ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் யார் சரியாக வருவார்கள்? என்று இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பார்ப்போம்.

- Advertisement -

முகமது சமி:

இன்றைய கிரிக்கெட் உலகத்தில் மிக அற்புதமான ஸீம் பவுலர். இவரது அப்ரைட் ஸீம் பந்துவீச்சு மட்டுமல்லாது, இவரது பந்துவீச்சு ரிதம் கூட அவ்வளவு அழகானது. ஆனால் இவரது டி20 பந்துவீச்சு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. சர்வதேச டி20 போட்டியில் இவரது எக்கானமி 9.44 என்று கவலைக்குரியதாக இருக்கிறது. இப்போதைய இந்திய அணிக்கு மணிக்கு 140 கிலோ மீட்டருக்கு மேல் வீசக்கூடிய ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவை. இவர் அதற்கு சரியானவர் மேலும் அனுபவம் கொண்டவர். ஆனால் இவரால் கடைசிக்கட்ட ஓவர்களை வெற்றிகரமாக வீச முடியாது என்பது கவலைக்குரிய அம்சம். தற்போது பும்ராவின் இடத்திற்கான போட்டியில் இவரே முன்னணியில் இருக்கிறார்!

முகமது சிராஜ் :

- Advertisement -

இந்திய அணி நிர்வாகம் இவரையும் முகமது சமி போல டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இவரை எனர்ஜெடிக் மெஷின் என்று அழைப்பார்கள். இவர் பந்து வீசும் பொழுது ஆட்டத்தில் எத்தனையாவது ஓவர் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. முதல் ஓவரை வீசும் அதே துடிப்பு வேகத்தோடு கடைசி ஓவரையும் வீசக்கூடிய உடற்தகுதி கொண்டவர். கட்டுக்கோப்பாக தொடர்ச்சியாக பந்துவீசாமல் விடுவது இவரது குறையாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் இவர் மிகச் சிறப்பான பந்துவீச்சை, ஆட்டத்தின் எல்லா பாகத்திலும் காட்டியிருந்தார். இவரால் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீச முடியும். முகமது சமிக்கு அடுத்த இடத்தில் இவர் வாய்ப்பில் இருக்கிறார்.

தீபக் சஹர் :

சராசரியான வேகத்தில் பந்தை காற்றில் இருபுறமும் ஸ்விங் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்களுக்கு எல்லா அணியிலும் பெரிய மதிப்பு இருக்கும். இவர் அப்படிப்பட்ட பந்துவீச்சாளர்தான். இப்பொழுது நடந்து வரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் இவரது பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. இவர் புதியபந்து பந்துவீச்சாளர் இறுதிக்கட்ட ஓவர்களுக்கு இவரைப் பயன்படுத்த முடியாது என்பது கருத்தாக இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் கடைசி கட்டத்தில் மிக சிறப்பாக வீசி காட்டினார். இவரைப் போலவே வீசக்கூடிய அனுபவ ஸ்விங் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அணியில் இருப்பதால் இவரை உள்ளே கொண்டு வருவது கடினம். ஏனென்றால் அணியில் நிச்சயம் 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசக்கூடிய பந்துவீச்சாளர் தேவை. இந்தக் காரணத்தால் இவர் போட்டியில் கொஞ்சம் பின் தங்குகிறார்.

ஆவேஸ் கான் :

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆட்டத்தில் எல்லாப் பகுதிகளிலும் சிறப்பாக பந்துவீசி கவனமீர்த்து இந்திய அணிக்குள் வந்த வேகப்பந்து வீச்சாளர் இவர். ஆனால் இவரது சர்வதேச கிரிக்கெட் பயணம் அவ்வளவு சிறப்பான ஒன்றாக இல்லை. ஆனால் இவரால் ஆட்டத்தின் எல்லா பாகத்திலும் பந்துவீச முடியும். எகிறும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உயரமாக, மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய ஒரு பந்து வீச்சாளர் ஒரு அணியில் இருப்பது கூடுதல் பலம். இந்தக் காரணத்தால்தான் இவர் இந்திய அணியில் இந்த ஆண்டு தொடர்ச்சியாக வாய்ப்பு பெற்று வந்தார். ஆனால் ஆசிய கோப்பையில் இவரது மோசமான செயல்பாடும், காய்ச்சலும் இந்திய அணியில் இருந்து வெளியே வைத்து விட்டது. தற்பொழுது மீண்டும் தென்ஆப்பிரிக்க அணியுடனான ஒருநாள் தொடருக்கு வந்திருக்கிறார். இவருக்கான வாய்ப்பு என்பது மிகக் குறைவுதான்!