இந்தியாவுக்கு பயத்தை காட்டிய மைக்கேல் பிராஸ்வெல் யார்? எந்த ஐபிஎல் அணியில் இருக்கிறார்

0
10422

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து  அணி 350 ரன்கள் என்ற இலக்கை எட்ட வேண்டிய நெருக்கடியில் களம் இறங்கியது. இதில் 131 ரன்கள் எடுப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியின் தோல்வி உறுதி என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பம்பரம் போல் சுழன்று ரன்களை குவித்தார் மைக்கேல் பிராஸ்வெல்.

78 பந்துகளை எதிர்கொண்ட அவர் 140 ரன்களை குவித்தார். இதில் 12 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும்.இப்படி அதிரடியாக ஆடும் இந்த நட்சத்திர பேட்ஸ்மேன் எங்கிருந்து வந்தார் என்று அனைவருமே தேடி வருகின்றனர். இவ்வளவு திறமை வைத்திருக்கும் மைக்கேல் பிராஸ்வெல் தனது 30வது வயதில் தான் நியூசிலாந்து அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.

ஆம் கடந்த ஆண்டுதான் நியூசிலாந்து அணிக்காக அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது.நேற்று போல் அதிரடியாக ஆடி அணியை தனி ஆளாக காப்பாற்றியது முதல் முறையல்ல. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தோல்வியை நோக்கி சென்றது .301 ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடியில் நியூசிலாந்து அணி விளையாடிய போது 120 ரன்களுக்கு 5  விக்கெட்டுகளை இழந்தது. அப்போது களத்திற்கு வந்த பிராஸ்வெல் இதேபோன்று அதிரடியாக ஆடி சதம் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக பிராஸ்வெல் 131 க்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியின் அருகே வரை அழைத்துச் சென்று விட்டார். இப்படி அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன் ஐபிஎல் இல் எந்த அணியில் இருக்கிறார் என்பதை அறிய நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் அல்லவா? அப்படி இருந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால் ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாமல் விலை போகாத வீரராக அறிவிக்கப்பட்டார். இத்தனைக்கும் அவர் தன்னுடைய அடிப்படை விலையை ஒரு கோடியாக தான் நிர்ணயித்திருந்தார்.