கோலியை மட்டும் குற்றம் சாட்டுகிறார்கள் ; ரோஹித் ஷர்மா ரன்கள் அடிக்காத போது மட்டும் ஏன் யாரும் கேள்வி கேட்காமல் இருக்கிறீர்கள் ? சுனில் கவாஸ்கர் அதிரடி

0
108
Sunil Gavaskar about Rohit Sharma and Virat Kohli

ஐ.பி.எல் தொடர் முடிந்து, செளத் ஆப்பிரிக்க அணியோடு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்த பொழுது, அந்தத் தொடரில் பேட்டிங்கில் மோசமாய் சொதப்பிய ரிஷாப் பண்ட்டை டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் எடுப்பதை விட, தினேஷ் கார்த்திக்கை எடுப்பதே சரியாக இருக்குமென்று டேல் ஸ்டெயின் வரை கருத்து நீண்டது. அடுத்து இந்திய அணி இங்கிலாந்து அணியோடு மோதிய ஒரு டெஸ்ட் போட்டியில் ரிஷாப் பண்ட் அதிரடியாய் ஒரு சதம் அடிக்க, அவரைப் பற்றியான விமர்சனங்கள் எழுந்த வேகத்தில் அடங்கியது. தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து அதற்குப் பிறகு ஒரு அதிரடி 30+ ரன்களும் வராமல் இருப்பது, ரிஷாப் பண்ட் குறித்தான விமர்சனங்களை மொத்தமாய் முடித்து வைத்திருக்கிறது!

ரிஷாப் பண்ட் சதமடித்து விமர்சனங்களிலிருந்து தப்பிய அதே டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸில் இருபது ரன்களை தாண்டாமலும், அடுத்த இரு டி20 போட்டிகளில் மொத்தமாய் 12 ரன்கள் மட்டுமே எடுத்த விராட் கோலியை டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யக் கூடாது என்ற கருத்துக்கள் உருவாக ஆரம்பித்திருக்கின்றன. இந்த வருட ஐ.பி.எல் தொடரில் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் பெரியளவில் சரிந்த போது எழுந்த விமர்சனங்கள், தற்போது இதனால் மீண்டும் தலைத்தூக்கி உள்ளன.

- Advertisement -

1983ஆம் ஆண்டு இந்திய அணி முதன் முதலாய் உலகக்கோப்பையை வெல்ல ஒரு வீரராகவும், கேப்டனாகவும் முக்கியக் காரணமாக இருந்த கபில் தேவ், சில நாட்களுக்கு முன், நம்பர் 2 பவுலர் அஷ்வினை நீக்க முடியும் என்றால், நம்பர் 1 பேட்டர் விராட்கோலியை டி20 அணியில் இருந்து ஏன் நீக்க முடியாது? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

கபில்தேவின் இந்தக் கூற்று குறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா பதில் சொல்லும் அளவிற்குப் போனது. பத்து வருடங்களாக மிகச் சிறப்பாக விளையாடிய வீரரை, ஒரு ஆண்டு பேட்டிங் பார்மை வைத்து அணியிலிருந்து நீக்குவதெல்லாம் முடியாத காரியம். விராட் கோலியின் முக்கியத்துவம் எங்களுக்குத் தெரியும். வெளியில் பேசுவது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்று ரோகித் சர்மா பேசியிருந்தார்.

இந்த நிலையில் 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அணியில் ஒரு வீரரான லெஜன்ட் கவாஸ்கர் இதுபற்றி கூறும்பொழுது, கபில்தேவின் கருத்திற்கு எதிராகப் பேசியிருக்கிறார். அவர் கூறும் பொழுது “ரோகித் சர்மா ரன் அடிக்காத பொழுது, அதைப்பற்றி ஏன் யாருமே பேசுவதில்லை என்று எனக்குப் புரியவில்லை. வேறு யார் ரன் அடிக்காவிட்டாலும் அதைப்பற்றியும் பேசுவதில்லை. ஆனால் விராட் கோலி ரன் அடிக்காவிட்டால் மட்டும் பேசுகிறார்கள். பார்ம் நிரந்தரம் அல்ல, தரம்தான் நிரந்தரம். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இப்படியானது வீரர்களை வீழ்த்தும். எங்களிடம் நல்ல தேர்வுக்குழு உள்ளது. டி20 உலகக்கோப்பைக்கான அணியை அறிவிக்க இன்னும் ரெண்டு மாதங்கள் உள்ளது. நடுவில் ஆசியக் கோப்பை தொடர் உள்ளது. அதில் யார் எப்படி செயல்படுகிறார்கள் என்று பார்த்து வாய்ப்பு வழங்கலாம். அதுவரையில் நேரம் கொடுப்பதுதான் சரியானது” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -