இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் நிலை என்ன? கோப்பையை வெல்லுமா? ஜாக் காலிஸ் கணிப்பு!

0
1233
Kallis

டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி துவங்கி நவம்பர் 13 வரையில் நடக்க இருக்கிறது. இந்த டி20 தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 8 அணிகள் தகுதி சுற்று போட்டியில் விளையாடுகின்றனர். இதில் இருந்து 4 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 12 அணிகளை இரண்டு குழுவாக பிரித்து, இரண்டு குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகளை கொண்டு அரையிறுதி நடத்தப்பட்டு, அதிலிருந்து இறுதிப்போட்டிக்கு இரண்டு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சாம்பியன் யார் என்ற முடிவு எட்டப்படும்!

இந்திய அணி பி பிரிவில் பாகிஸ்தான், சவுத் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் இருக்கும் பிரிவில் இடம் பெற்று இருக்கிறது. இந்த பிரிவில் மேலும் இரண்டு அணிகள் தகுதி சுற்றில் மூலம் இடம்பெறும். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து இந்திய அணியில் குழுவில் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

நடைபெற இருக்கும் இந்த டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து இந்திய அணி நிர்வாகம் கடந்த ஏழு எட்டு மாதங்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் தயாராகி வந்தது. ஆசிய கோப்பைக்கு முன்புவரை இந்தியா டி20 அணி நல்ல முறையிலேயே வெற்றிகரமாக பயணப்பட்டு வந்தது.

ஆசியக் கோப்பையில் காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படெல் இடம் பெறாமல் போனதும், தொடரின்போது காயத்தால் ரவீந்திர ஜடேஜா, ஆவேஸ் கான் விலகியதும் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை கொண்டு வந்தது. இந்த காரணங்களால் இந்திய அணி ஆசிய கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியுடன் உள்நாட்டில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தும், அந்த ரன்னை கொண்டு ஆஸ்திரேலிய அணியை மடக்க முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. இதெல்லாம் சேர்த்து உலகக் கோப்பையில் இந்திய அணியின் மதிப்பை குறைத்து இருக்கிறது. அத்தோடு அணியினரின் தன்னம்பிக்கையும் குறைத்து இருக்கிறது என்று கூறலாம்.

இந்தநிலையில் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் நிலை எவ்வாறு இருக்கும்? இந்த இந்திய அணி எப்படியானது? என்பது குறித்து லெஜெண்ட் கிரிக்கெட்டர் மற்றும் உலகின் தலைசிறந்த முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தென்ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஜாக் காலிஸ் கூறும்பொழுது
“இந்திய அணி சில சிறந்த டி20 கிரிக்கெட் விளையாடி உள்ளது. அவர்கள் இந்த டி20 உலக கோப்பையில் ஒரு முக்கியமான அணியாகவே இருப்பார்கள். நாம் விரும்பிய வழியில் செல்ல, உலக கோப்பையில் யாருக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். பெரிய தருணங்களில் இது தேவை. அதை அவர்கள் வெல்லவும் வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

மேலும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்து அவரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ” ஒவ்வொரு அணியிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டங்கள் அல்லது காலங்கள் இருக்கத்தான் செய்யும் ” என்று தெரிவித்திருந்தார்!