“என்ன தப்பு நடந்துச்சு? என்னை ஏன் ஐபிஎல் ஏலத்துல யாரும் வாங்கல?” – சந்தீப் சர்மா குமுறல்!

0
168
Sandeep Sharma

அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சின் நகரில் மிக பரபரப்பாக சுவாரசியமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த மினி ஏலத்தில் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் விலை போகாத தொகைக்கு இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் சாம் கரனும் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனும் விலை போய் இருக்கிறார்கள்!

இன்னொரு புறத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிம்பாப்வே நாட்டு ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராஸா அடிப்படை விலையான ஐம்பது லட்சத்திற்கு மட்டுமே விலை போய் ஆச்சரியத்தை உண்டாக்கினார். இது இப்படி இருக்க இன்னொரு பக்கத்தில் ஐபிஎல் தொடரில் 100 விக்கட்டுகளுக்கு மேல் வீழ்த்தி விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 13வது இடத்தில் இருக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் சந்திப் சர்மா விலை போகாதது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

- Advertisement -

2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த இவர், 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அடுத்து நடந்த மெகா ஏலத்திலும், தற்போது நடந்த மினி ஏலத்திலும் இவரை யாரும் விலைக்கு வாங்கவில்லை .

இது குறித்து பேசி உள்ள அவர் “இதனால் நான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன். நான் ஏன் விற்கப்படாமல் போனேன் என்று புரியவே இல்லை. நான் எந்த அணிக்காக விளையாடினாலும் மிகச் சிறப்பாகவே விளையாடியிருக்கிறேன். இந்த முறை சில அணிகள் என்னை ஏலத்தில் எடுக்கும் என்று நான் உண்மையாக நம்பினேன். மேலும் உண்மையைச் சொல்வதாக இருந்தால் இதை நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. இந்த விஷயத்தில் எங்கே தவறு நடந்தது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் நான் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் நன்றாகவே செயல்பட்டு வந்துள்ளேன். ரஞ்சி டிராபி இறுதி சுற்றில் ஏழு விக்கட்டுகள் வீழ்த்தினேன். சையது முஸ்டாக் அலி தொடரிலும் நன்றாகவே செயல்பட்டேன்!” என்று தெரிவித்துள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” எனது பந்துவீச்சில் நான் எப்பொழுதும் நிலையாக இருக்க முயற்சி செய்வேன். அது மட்டுமே என் கையில் உள்ளது. தேர்வு செய்யப்படுவதோ தேர்வு செய்யப்படாததோ என் கையில் கிடையாது. ஒரு வாய்ப்பு வந்தால் நல்லது இல்லையென்றால் நான் இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும் ” என்று முடித்துக் கொண்டுள்ளார். இவர் இந்திய அணிக்காக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டியில் 2015 ஆம் ஆண்டு அறிமுகமாகி இரண்டு போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -