விராட் கோலி என்ன பாக்கெட்டிலா இருக்கிறார்? ஜிம்பாப்வே கேப்டன் அதிரடி பேச்சு!

0
24551
Ervin

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் தற்பொழுது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்பொழுது வாழ்வா சாவா ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து அணி இலங்கை அணி எதிர்த்து விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து அணி வெல்லும் பட்சத்தில் அரையிறுதிக்குத் தகுதி பெறும். தோற்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்!

இந்தியா நாளை இந்த டி20 உலகக் கோப்பையில் பிரதான சுற்றின் கடைசிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்று கூறலாம். நெதர்லாந்து அணியை தென்னாப்பிரிக்கா அணியும், பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் அணியும் வென்றால், இந்திய அணி ஜிம்பாப்வே அணியையும் வெல்ல வேண்டும். அப்பொழுதுதான் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற முடியும்.

நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் நிலைமை இவ்வாறு இருக்க, இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தத் தொடரில் நான்கு ஆட்டங்களில் மூன்று அரை சதங்களை ஆட்டம் இழக்காமல் அடித்துள்ளார். மேலும் இந்த டி20 உலகக் கோப்பையில் விராட் கோலிதான் அதிக ரன் அடித்தவர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இன்று விராட் கோலியின் 34-வது பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது!

இந்தப் போட்டிக் குறித்தும் விராட் கோலி குறித்தும் ஜிம்பாப்வே அணி கேப்டன் எர்வின் இடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது அதற்கு அவர் “நிச்சயமாக உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக பந்து வீச இது ஒரு அருமையான வாய்ப்பு. இப்படி இருக்கும் பொழுது எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் இப்படியான வாய்ப்பை வேண்டாம் என்று எப்படி மறுப்பார்கள்? இப்படியான வாய்ப்பு உங்களுக்கு அடிக்கடி கிடைக்குமா? விராட் கோலி என்ன நம் பாக்கெட்டிலா இருக்கிறார்? எனவே எங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் நாளை திரும்பி வருவார்கள் என்று நான் நம்புகிறேன் ” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” விராட் கோலிக்கு எதிராக எங்களிடம் எந்த திட்டமும் இல்லை என்றுதான் நான் கூறுவேன். அவர் மிகவும் திறமையான வீரர். இப்படியான நபர்களுக்கு சிறப்பு திட்டங்கள் என்று எதுவும் கிடையாது. இவர்களை வீழ்த்த அப்படி உருவாக்கப்படும் திட்டங்கள் பலனளிக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இவர்கள் வெவ்வேறு நிலைமை மற்றும் சூழலுக்குத் தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொண்டு விளையாடும் திறமையானவர்கள் ” என்று புகழ்ந்து கூறியுள்ளார்!