“பும்ரா இப்ப இல்லனா என்ன?” – ஆகாஷ் சோப்ரா சில ஆச்சரிய தகவல்கள்!

0
188
Bumrah

நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு ஆரம்பித்த பிரச்சனைகள் எதுவுமே ஓய்ந்தபாடு கிடையாது. இருந்த பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் வருகிறது. இதுவெல்லாம் சேர்ந்து ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு பெரிய தலைவலியை உருவாக்கியிருக்கிறது.

ஆனால் அதே சமயத்தில் எப்படியான நெருக்கடிகளையும் சமாளிக்கும் வகையில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது என்பதையும் பார்த்திருந்தோம். அவர்கள் எல்லாவற்றுக்கும் ஒரு திட்டத்தையும் மாற்றையும் வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படியெல்லாம் இருந்தும் கூட தற்போது ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து முதுகில் ஏற்பட்ட காயத்தால் விலகி இருப்பது, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுத்து இருக்கிறது.

இன்று மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக்கூடிய தலைசிறந்த ஒரு வேகப்பந்துவீச்சாளர் இருக்கிறார் என்றால் அது இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா மட்டும்தான் என்று தாராளமாக அடித்துச் சொல்லலாம். அந்த அளவிற்கு அவரிடம் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு என்னென்ன தேவையோ அது அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் ஒரு அணி இழப்பது நிச்சயம் அந்த அணிக்கு பின்னடைவு தான்.

நிலைமை இப்படி இருக்க ஜஸ்பிரித் பும்ரா இல்லாவிட்டாலும் இந்திய அணியால் வெல்ல முடியுமென்றும், அவரது காயம் ஆபத்தான ஒரு விஷயம் என்றும் சில ஆச்சரியத்தக்க கவலைக்குரிய விஷயங்களை இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி ஆகாஷ் சோப்ரா கூறுகையில்
” குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் எப்படி வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணிக்கு தெரியும். பும்ரா உண்மையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணிக்காக 10 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “பணிச்சுமைக்கும் இந்த காயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரது பணிச்சுமை நல்ல முறையிலேயே நிர்வகிக்கப்படுகிறது. இப்போது அவர் குறைவான போட்டிகளில் விளையாடுகிறார். இப்படி இருந்தும் அவருக்கு காயம் உண்டாகிறது என்றால் அது மிகவும் கவலைக்குரிய ஒரு விஷயம் ” என்று புதிய கோணத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்!