“என்ன கம்பேக்?….ஒளிபரப்பாளர்கள் மக்களிடம் சரியான விஷயங்களை கூற வேண்டும்! – பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரோகித் சர்மா காட்டம்!

0
429

நேற்று நடந்து முடிந்த இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் அபாரமாக ஆடி சதம் அடித்தனர் .

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் போட்டியில் அடிக்கும் சதம் இதுவாகும் . இந்த சதத்தின் மூலம் அவர் ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்தார். ரோஹித் சர்மா கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் சதம் அடித்தபோது போட்டியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்கள் மூன்று வருடத்திற்குப் பின் ரோகித் சர்மாவின் சதம் என மைதானத்தில் இருந்த பெரிய திரையில் விளம்பரம் செய்தனர் . இது ரோகித் சர்மாவை கோபமடைய செய்துள்ளது. இது பற்றி போட்டி முடிந்த பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் ” கடந்த மூன்று வருடங்களில் நான் 17 ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறேன். மற்ற போட்டிகளில் காயம் காரணமாகவும் ஓய்வு காரணமாகவும் விளையாடவில்லை” என்று கூறினார்.

இதுபற்றி தொடர்ந்து பேசிய அவர் ” ஒரு விஷயத்தைப் பற்றி சொல்லும் போது அதனைப் பற்றிய சரியான தரவுகளைக் கொண்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மூன்று வருடங்களாக சதம் அடிக்கவில்லை என்பது உண்மைதான் ஆனால் நான் மொத்தமே 17 போட்டிகளில் தான் இந்த மூன்று வருடங்களில் விளையாடி இருக்கிறேன் . அவர்கள் அதையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்” என்று கூறினார். நீங்கள் மீண்டும் ஃபார்மிற்கு வந்து விட்டீர்களா? என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு” 2020 ஆம் வருடம் நாம் அனைவரும் கோவிட் தொற்றின் காரணமாக வீடுகளில் தான் இருந்தோம். கிரிக்கெட் மீண்டும் தொடங்கிய போது காயம் காரணமாக என்னால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் ஆட முடிந்தது . மேலும் அதனைத் தொடர்ந்து 20-20 உலகக் கோப்பை இருந்ததால் அதிகமான அளவு டி20 போட்டிகளில் ஆடினோம். தற்போது தான் தொடர்ச்சியாக ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறேன் என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய ரோஹித் கில் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை பாராட்டினார். சுப்மன் கில் ஒரு மிகச் சிறப்பான வீரர் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு சிறப்பாக ஆடி வருகிறார் . நான் இதற்கு முன்பே கணித்துக் கூறியிருந்தேன் எதிர்கால இந்தியாவின் ஸ்டார் கிரிக்கெட்டர் இவர் தான் என்று. அதை தற்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். குல்தீப் யாதவ் அணிக்கு திரும்பியதில் இருந்து மிகச் சிறப்பாக பந்துவீசி கொண்டிருக்கிறார் . நான் அவர் கையில் எப்போது பந்தை கொடுத்தாலும் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறார் என்று பாராட்டினார் .

ஒரு நாள் போட்டிகளை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகள் நாளை மறுநாள் ராஞ்சியில் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் .