இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் கடைசி 2 டி20 போட்டிகளை நடத்துவதில் பெரும் சிக்கல் ! செய்வது அறியாமல் தவிக்கும் மேற்கிந்திய கிரிக்கெட் நிர்வாகம்

0
2646
Ind vs Wi

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வெஸ்ட்இன்டீஸ் சென்றுள்ளது. அங்கு ஷிகர் தவானின் தலைமையில் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி, அந்த ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் தொடர் நாயகன் விருது வென்றார்.

இந்த ஒருநாள் தொடர் முடிந்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி வெஸ்ட்இன்டீஸ் அணியோடு விளையாடுகிறது. இதற்காக ஒருநாள் தொடருக்கு ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணிக்குத் திரும்பினார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 190 ரன்களை குவித்தது. வெஸ்ட்இன்டீஸ் அணியால் 122 ரன்களே எட்டு விக்கெட் இழப்பிற்கு எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது!

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி பிரையன் லாரா மைதானத்தில் டிரினிடாட்டில் நடந்தது. அடுத்த இரண்டு போட்டிகள் ஆகஸ்ட் 1 , 2 ஆம் தேதிகளில் வார்னர் பார்க், செயின்ட் கிட்ஸில் நடக்கிறது.

இதையடுத்த இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தின் சென்ட்ரல் ப்ரோவார்டு ரிஜினல் பார்க் ஸ்டேடியத்தில், டர்ப் மைதானத்தில் ஆகஸ்ட் 6, 7 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானம் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மைதானம் ஆகும். தற்போது இந்த இரண்டு போட்டிகள் நடைபெறுவதில்தான் ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது!

என்ன சிக்கல் என்றால்; வெஸ்ட்இன்டீஸ் இந்தியா இரு அணியின் வீரர்களுக்கும் அமெரிக்கா விசா குறித்த நேரத்தில் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த நேரத்தில் அமெரிக்காவின் புளோரிடாவில் போட்டிகளை நடத்த முடிவதில் பிரச்சினை உருவாகி உள்ளது. இந்தத் திடீர் பிரச்சினையால் மாற்று வழிகளைக் கண்டறிய வெஸ்ட்இன்டீஸ் கிரிக்கெட் ஆலோசித்து வருகிறது!

இதுகுறித்து வெஸ்ட்இன்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் தரப்பில் கூறும்பொழுது “வெஸ்ட்இன்டீசில் அந்த இரண்டு ஆட்டங்களை நடத்துவது சாத்தியமில்லை. அதனால் விசா சிக்கலைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் நிலுவையில் உள்ள விசாக்களைப் பெறவும், வேறு விருப்பங்களும் ஆராயப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!