இந்திய அணியின் வருங்கால கேப்டன் பதவிக்கு தற்போதே அவரை தயார்படுத்த எண்ணுகிறோம் – கே.எல்.ராகுல் குறித்து இந்திய தேர்வு குழு சேர்மன் சேட்டன் ஷர்மா விளக்கம்

0
186
Chetan Sharma and Virat Kohli

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா கடந்த மாதம் பதவி ஏற்றார். தற்பொழுது இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. டெஸ்ட் தொடர் நடந்து முடிந்ததும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் ஷர்மா வெளியேறி இருந்தார்.

அவர் கூடிய விரைவில் குணமடைந்து ஒருநாள் தொடரில் கேப்டனாக அணியை வழிநடத்துவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் தற்பொழுது அவர் இன்னும் முழுவதுமாக குணமடையாத காரணத்தினால் ஒருநாள் தொடரில் இருந்தும் வெளியேறி உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்திய அணியின் வருங்கால கேப்டனாக கேஎல் ராகுல் வலம் வருவார்

கேஎல் ராகுலை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டனாக்கிய செயலுக்கு பின்னர் ஒரு காரணம் இருக்கிறது என்று தற்போது இந்திய அணியின் பிசிசிஐ தேர்வுக்குழு சேர்மன் சேட்டன் ஷர்மா விளக்கிக் கூறியுள்ளார். கேஎல் ராகுல் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்துவித பார்மெட்டிலும் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்.

ரோஹித் ஷர்மா இல்லாத சூழ்நிலையில் அணியின் கேப்டனாக அவர் தலைமை ஏற்று சிறப்பாக இருக்கும் என்று எண்ணினோம். அவருடைய கேப்டன் பணியை ஐபிஎல் தொடரில் சிறப்பாக செய்திருக்கிறார். வருங்காலத்தில் கே எல் ராகுல் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த இந்த தொடர் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கும். அவரை இப்போதிலிருந்து வருங்கால கேப்டன் பதவிக்கு தயார்படுத்துவது சரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

எங்களது முதல் இலக்கு இந்தாண்டு உலக கோப்பை டி20 தொடர் தான்

இந்திய அணியில் பல்வேறு புதிய வீரர்கள் தற்போது இணைகின்றனர். வருங்காலத்தில் சிறப்பாக விளையாடக் கூடிய அளவில் ஒரு இந்திய அணியை கட்டமைப்பது மிகவும் அவசியமானது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான அணியை தயார்படுத்தியாக வேண்டும்.

- Advertisement -

ஆனால் எங்களுடைய முதல் இலக்கு இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கின்ற ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் தான். தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சிறந்த வீரர்களை முன்னிறுத்தி ஒரு சிறந்த அணியை கட்டமைக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற இன்னும் நாட்கள் இருக்கிறது. எனவே எங்களுடைய முதல் இலக்கு உலக கோப்பை டி20 தொடர் தான் என்றும் சேட்டன் ஷர்மா கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தவுடன் நிச்சயமாக புதிய கேப்டன் இந்திய அணியை வழிநடத்துவார். அதுவரையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடும். உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது, இருப்பதிலேயே மிகவும் சவாலான ஒன்று என்று இறுதியாக சேட்டன் ஷர்மா கூறி முடித்தார்.