வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எங்கள் நாட்டு மக்களின் முகத்தில் சிரிப்பை கொண்டு வரவேண்டும்; ஆசியகோப்பையை வெல்ல வேண்டும் – கண்ணீர் மல்க பேசிய பாகிஸ்தான் வீரர்!

0
101

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட எங்களது நாட்டு மக்களின் முகத்தில் மீண்டும் சந்தோஷத்தை கொண்டு வருவதற்காக நாங்கள் ஆசிய கோப்பையை வெல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் சதாப் கான் பேட்டி அளித்தார்.

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வருகிற ஞாயிறு அன்று நடைபெறவிருக்கிறது. இதில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொள்ளவிருக்கின்றன. இரு அணிகளும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

- Advertisement -

இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் மழைப்பொழிவு அதிகரித்திருப்பதால், பாகிஸ்தானின் பெரும் பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வெள்ளத்தில் கிட்டத்தட்ட 3.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், இன்னும் அதிகமானோர் உயிரிழந்திருக்க கூடும் என்றும் அந்நாட்டின் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த வெள்ளத்தினால் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அமைச்சர் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது.

2017 ஆம் ஆண்டு தெற்கு ஆசிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் இதுவாகும். உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்ட முன் வந்திருக்கின்றனர். மூன்றில் ஒரு பகுதி முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளது. கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி ஒரு மோசமான பேரழிவை சந்தித்து வரும் பாகிஸ்தான் நாட்டு மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வருவதற்காக ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மற்றும் துணை கேப்டன் சதாப் கான் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேட்டி அளித்தார். ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர்,

- Advertisement -

“வானிலை மாற்றங்களால் பாகிஸ்தான் வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்து வருகிறது. மூன்றில் ஒரு பகுதி மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். பாகிஸ்தான் நாட்டிலிருந்து வெளியே இருக்கும் நாங்கள் எங்கள் நாட்டின் பாதிப்பை பார்க்கையில் மிகவும் மன வேதனைக்கு உள்ளாகி வருகிறோம். ஒவ்வொரு நாளும் எங்கள் காதுகளுக்கு வரும் செய்திகள் பேரதிச்சியை கொடுக்கின்றன. சிறிது காலம் எங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்க நாங்கள் இந்த ஆசிய கோப்பையை நிச்சயம் வென்றாக வேண்டும்.” என்று கண்ணீர் மல்க பேசினார்.

மேலும் பாகிஸ்தான் அணியின் பலம் குறித்து பேசிய அவர், “நாங்கள் எங்களது அணியை சாம்பியன் அணியாக நிரூபிக்க இது மிகச் சரியான தருணம். இது மட்டுமல்லாது அடுத்து வரவிருக்கும் மிகப்பெரிய தொடர்களையும் நாங்கள் வெல்ல வேண்டும். சாம்பியன்ஸ் அணி எப்போதும் அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளை சரியாக கையாண்டு போட்டியில் வெற்றி பெறும். எங்களது அணி பலம் மிக்கதாக இருப்பதால் இதுபோன்ற அழுத்தம் நிறைந்த தொடர்களை எங்களால் நிச்சயம் வெல்ல முடியும். இலங்கை அணி பலம் மிக்கதாக காணப்படுகிறது. அவர்களை வெல்வது எங்களுக்கு சவாலாக இருக்கும்.” என்றும் தெரிவித்தார்.