மும்பை அணி தொடர்ந்து பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் ; அதற்கு இதுதான் காரணம் – கேப்டன் ரோஹித் ஷர்மா

0
89
Rohit Sharma and Mayank Markande

இந்த வருடம் ஐ.பி.எல் பதினைந்தாவது சீசன், ஐ.பி.எல் வரலாற்றில் சாம்பியன்களான மும்பை இன்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு மிக மோசமான சீசனாக அமைந்து இருக்கிறது. இரு அணிகளுமே முதல்முறையாக ஒருசேர ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி இருக்கின்றன!

இந்த முறை மெகா ஏலத்தில் மும்பை அணியின் செயல்பாடு பல கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்களிடம் விமர்சனத்திற்கு உள்ளாகியே இருந்தது. இஷான் கிஷனுக்கு 15 கோடி ஏலத்தில் போய் வாங்கியதும், இந்த வருடம் ஆடாத ஆர்ச்சருக்கு 8 கோடி செலவிட்டதும், டிம்-டேவிட்டுக்கு 8 கோடி செலவிட்டதும் மும்பை அணிக்குப் பெரிய சரிவை உருவாக்கி விட்டது. இதனால் அவர்களால் பாண்ட்யா சகோதரர்களின் இடத்தை நிரப்பும் வீரர்களை வாங்க முடியாமல் போய்விட்டது. சரியான வேகப்பந்து வீச்சு கூட்டணியையும் உருவாக்க முடியவில்லை.

- Advertisement -

இதனால் தொடரின் ஆரம்பத்தில் உண்டான தோல்வி எட்டு ஆட்டங்கள் வரை மும்பை அணிக்கு நீடித்து, தொடர்ந்து முதல் எட்டு ஆட்டங்களைத் தோற்ற முதல் அணி என்ற மோசமான சாதனையோடு, தொடரில் முதல் அணியாக ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறியது.

மேலும் மும்பை அணியின் முதுகெலும்பாக இருக்கும் சூர்ய குமார் யாதவின் காயம் மும்பை அணிக்கு ஆரம்பத்தில் பெரிய இழப்பாக அமைந்துவிட்டது. தற்போது சூர்யகுமார் தொடரிலிருந்தும் காயத்தால் வெளியேறிவிட்டார். இவருக்கு முன்னதாக டைமால் மில்சும் காயத்தால் வெளியேறி இருந்தார். இவர்களுக்குப் பதிலாக சில வீரர்களைக் கொண்டுவந்து கொஞ்சம் சரிவிலிருந்து மும்பை அணி மீண்டிருக்கிறது. கடைசி ஆட்டத்தில் மிகச்சிறப்பான பந்துவீச்சின் மூலம் சென்னை அணியை 97 ரன்களுக்கு வீழ்த்தி ஜெயித்திருக்கிறது.

இன்று தனது 13வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியோடு மும்பை மோதும் போட்டியில், மயங்க் மார்கண்டே, சஞ்சை யாதவ் ஆகியோருக்கு மும்பை அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுக்குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா “மயங்க் மார்கண்டே மற்றும் சஞ்சை யாதவ் உள்ளே வந்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டுக்காகச் சில வீரர்களைப் பரிசோதித்துப் பார்க்க விரும்புகிறோம். அடுத்த ஆண்டுக்கான அணியை அமைப்பதிற்கு முன் இப்பொழுது பரிசோதிக்கிறோம். ஒரு கோர் டீமை அமைப்போம். இதற்கடுத்து எங்களுக்கு இன்னும் ஒரு ஆட்டம் இருக்கிறது. அதில் மேலும் சில வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படலாம்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -