ஏலத்தில் நாங்கள் இந்த தந்திரத்தைப் பயன்படுத்தினோம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றி ரகசியம் குறித்து சங்கக்காரா வெளிப்படைப் பேச்சு

0
523
Kumar Sangakkara Rajasthan Royals

2022 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். 2008ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது தான் இந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இம்முறை அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. ஆரஞ்சு கேப் மற்றும் பர்ப்பில் கேப் இரண்டையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களே கைப்பற்றியுள்ளனர். டாப் ஆர்டரில் பட்லர், ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் ரன்கள் சேர்க்க ஃபினிஷராக ஹெட்மேயர் அதிரடி காட்டினார். இதற்கு இடையில் அவ்வப்போது அஷ்வின் டாப் ஆர்டரில் களமிறங்கி கூடுதல் பலம் அளித்தார். பந்துவீச்சில் போல்ட், கிருஷ்ணா மற்றும் இரு பெரிய ஸ்பின் மெஷின்கள் அஷ்வின் மற்றும் சாஹல் சிறப்பாக பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினர். புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் முடித்தது.

2022 ஐபிஎல் பிளே ஆப் :

முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் குவாலிபயர் 1இல் போட்டியிட்டன. 189 எனும் இமாலய ஸ்கோரை மில்லர் – பாண்டியா ஜோடி இணைந்து சேஸ் செய்து, குஜராத் அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றனர். எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை பெங்களூர் வென்று அடுத்தப் பொட்டிகுத் தகுதி பெற்றது. இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பாதையான குவாலிபயர் 2இல் ராஜஸ்தான் – பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே சேர்த்தது. குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 16 ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் 3 சிக்ஸர்களை வாரி வழங்கிய பிரசித் கிருஷ்ணா, இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

158 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது. இந்த தொடர் முழுக்க அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜாஸ் பட்லர், அபார சதம் விளாசி இந்த சீசனில் தன் நான்காவது சதத்தைப் பதிவு செய்தார். ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த தொடரில் ராஜஸ்தான் அணியின் இத்தகு சிறப்பான ஆட்டம் குறித்து ராஜஸ்தான் அணி இயக்குனர் குமார் சங்கக்காரா பேசியுள்ளார்.

“ ஏலத்தில் நாங்கள் எங்களுடைய 95% பணத்தை முதலில் வலிமையான பிளேயிங் லெவனை உருவாக்குவதில் மட்டுமே செலவு செய்தோம். எங்களுக்கு எப்படிப்பட்ட வீரர்கள் வேண்டும் என்பது குறித்து ஏலத்திற்கு முன் கடுமையாக உழைத்தோம். தற்போது அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்களிடம் ஏராளமான இளம் வீரர்கள் உள்ளனர், அவர்கள் பின்னர் நட்சத்திரங்களாக மாறுவார்கள். ஆனால் தற்போது எங்கள் அணியின் முதல் 11 இடங்களில் அனுபவம் வாய்ந்த மற்றும் சர்வதேச வீரர்கள் இருக்கிறார்கள். ” என்றார் சங்கக்காரா.

மேலும் அவர், “ ஐபிஎல் ஏலத்தின் போது அயராது உழைத்த கில்ஸ் லிண்ட்சே, எங்கள் ஆய்வாளர் ஜூபின் பருச்சா மற்றும் மற்ற ஊழியர்களுக்கு முழு பாராட்டுகளும் சேரும். வெற்றி எளிதாக வந்துவிடாது. அதற்கு திட்டமிடுதல், கடுமையான உழைப்பு மற்றும் திட்டத்தை காலத்தில் சிறப்பாக வெளிப்படுத்தல் ஆகியவற்றை சரியாகச் செய்ய வேண்டும். ” என்றார்.

- Advertisement -