யார் சொல்லி 100 ரன்கள் கூட அடிக்க முடியாத பவுலிங் பிட்ச்சை ரெடி பண்ணாங்க? – இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளர் பேட்டி!

0
5785

இவ்வளவு குறைவான ஸ்கொர் அடிக்கும் அளவிற்க்கு பவுலிங் பிட்ச் தயார் செய்தது யார்? எதனால்? என்று இந்தியாவின் பவுலிங் பயிற்சியாளர் பரஸ் மாம்பரே பேட்டியளித்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதி வரும் டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளது. இரண்டு போட்டிகளுமே குறைந்த ஸ்கொர் அடிக்கக்கூடிய மற்றும் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமானதாக இருந்தது.

- Advertisement -

முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் செய்த சில தவறுகளால் மட்டுமே 176 ரன்களை நியூசிலாந்து அடித்தது. மற்றபடி 130-140 ரன்கள் அடிப்பதே கடினமானது.

அதேபோல் இரண்டாவது போட்டி நடத்தப்பட்ட லக்னோ மைதானத்தில் இரு அணிகளும் 100 ரன்களை எட்டுவதற்கே மிகவும் தடுமாறின. நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 99 ரன்கள் அடித்திருந்தது.

இந்த 100 ரன்கள் இலக்கை கடக்க இந்திய அணி 19.5 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. இரண்டாவது டி20 போட்டியில் வீசப்பட்ட 40 ஓவர்களில் 30 ஓவர்கள் சுழல்பந்து வீச்சாளர்கள் வீசினார்கள்.

- Advertisement -

இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் 28 ஓவர்கள் சுழல் பந்துவீச்சாளர்களால் வீசப்பட்டது அதிகபட்சமாக இருந்தது. தற்போது இந்தியா-நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது இது முறியடிக்கப்பட்டிருக்கிறது.

எதற்காக இவ்வளவு குறைவான ரன்கள் அடிக்கக்கூடிய சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்கள் தயார் செய்யப்பட்டது? இது இந்திய அணி நிர்வாகத்தின் வற்புறுத்தலின் பெயரில் செய்யப்பட்டதா? என இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே இடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,

“முழுக்க முழுக்க பிட்ச் பராமரிப்பாளர்கள் தான் என்ன மாதிரியான பிட்ச் தயார் செய்யவேண்டும் என்று முடிவு செய்து உருவாக்குகின்றனர். இதில் இந்திய அணி நிர்வாகத்தின் தலையீடு எந்த வகையிலும் இல்லை. பிட்ச் ஏன் இப்படி இருக்கிறது? என்கிற கேள்வியை கேட்க வேண்டும் என்றால் பிட்ச் பராமரிப்பாளரிடம் கேளுங்கள்.”

“முதல் நாளே மைதானத்திற்கு வந்து பயிற்சியில் ஈடுபடும்போதே பிட்சில் புற்கள் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இரண்டு பக்கங்களிலும் அப்படி இருந்தது. ஆகையால் நிறைய டர்ன் இருக்கும் வித்தியாசமான பவுன்ஸ் கிடைக்கும் என்று கணித்தோம். 120-130 ரன்களுக்கும் மேல் அடிக்கவேண்டும் அல்லது அதற்குள் நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம். அதற்கேற்றவாறு அணியை தேர்வு செய்தோம். பிட்ச் இப்படி வேண்டும், அப்படி வேண்டும் என்கிற தலையீடு எதுவும் நாங்கள் செய்யவில்லை.” என்றார்.