“நாங்கள் உலகத்திற்கு நல்ல செய்தியை கொடுத்திருக்கிறோம்.. விடைபெறுகிறோம்!” – ஆப்கான் கேப்டன் நெகிழ்ச்சியான பேச்சு!

0
4860
Afghanistan

நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிகச்சிறப்பான நினைவுகளை தேக்கிக்கொண்டு ஆப்கானிஸ்தான் அணி, நடப்பு உலகக்கோப்பையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டிருக்கிறது.

இன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்த போதிலும், ஆப்கானிஸ்தான் அணியின் ஓமர்ஸாய் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்து அணியை 244 ரன்கள் என்கின்ற கௌரவமான நிலைக்கு கொண்டு சென்றார்.

- Advertisement -

அடுத்து பந்துவீச்சில் திரும்பி வந்து தென் ஆப்பிரிக்கா அணியின் முக்கிய ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி, 48வது ஓவர் வரைக்கும் ஆட்டத்தைக் கொண்டு சென்று, இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்த உலகக் கோப்பைத் தொடரை ஒருதலைப் பட்சமாக செல்ல விடாமல் தடுத்ததில் ஆப்கானிஸ்தான் அணியின் பங்கு மிகப் பெரியது. இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என உலகக் கோப்பையை கைப்பற்றிய அணிகளை வென்று, அரையிறுதிக்கான புள்ளி பட்டியலை எப்பொழுதும் திறந்தே வைத்திருந்தது.

கடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணிவுடனான ஆட்டத்தையும் தன் கையில் வைத்திருந்தே தோற்றது. ஒட்டுமொத்தமாக இந்த உலகக்கோப்பைத் தொடர் ஆப்கானிஸ்தான அணிக்கு மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

போட்டிக்குப் பின் பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிதி கூறும் பொழுது “ஒரு கேப்டனாக எங்களுடைய ஒட்டுமொத்த செயல்பாடுகளில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் கடைசி வரை போராடினோம். எங்களிடம் நல்ல போட்டிகள் இருந்தன. எங்களுக்கு எதிர்காலத்திற்கான நல்ல பாடங்கள் கிடைத்தன.

எங்களுடைய பேட்ஸ்மேன்கள் செயல்பட்ட விதம் பெருமையாக இருக்கிறது. உலகக்கோப்பைக்கு முன்பு நாங்கள் சிரமப்பட்டோம். எனவே நாங்கள் ஒன்றாக அமர்ந்து எங்கள் பலவீனங்கள் குறித்து பேசினோம்.

இறுதியாக நாங்கள் எப்படி செயல்பட்டோம் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். இது எதிர்காலத்திற்கான சாதகமான அறிகுறியாகும். எங்களிடம் நல்ல ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். நாங்கள் பேட்டிங்கில் இதே வேகத்தை தொடர்ந்து எடுத்துச் சென்றால் மிகச் சிறப்பாக இருப்போம் என்கின்ற நல்ல செய்தியை உலகத்திற்கு தெரிவித்திருக்கிறோம்.

பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடி தோற்றாலும் நாங்கள் கடைசி வரை போராடினோம். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டமும் எங்கள் கையில்தான் இருந்தது. மேக்ஸ்வெல் விளையாடிய விதம் இறுதியில் எங்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆனாலும் எங்களுக்கு அதிலும் நிறைய பாடங்கள் கிடைத்தது!” என்று கூறியிருக்கிறார்!