இந்தியா ரெடியா இருங்க, டெஸ்ட் சீரிஸ் ஜெயிக்க வரோம் – எச்சரித்த ஆஸி., கேப்டன் கம்மின்ஸ்!

0
933

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஜெயிப்பதற்கு எங்களுக்கு மிகச் சிறந்த சான்ஸ் கிடைத்திருக்கிறது என பேசியுள்ளார் பேட் கம்மின்ஸ்.

தென்னாபிரிக்காவுடன் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததால், ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் 75.56% வெற்றிகளுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இரண்டாவது இடத்திற்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் போட்டி போடுகின்றன.

வருகிற பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றினால் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுடன் ஆன டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு பேட்டி அளித்த ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில்,

“தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் வெற்றியுடன் இந்த சம்மர் எங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. கடந்த 12 மாதங்கள் எங்களின் உழைப்பிற்கு பல வெற்றிகள் கிடைத்திருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிற்குச் செல்லும்போதும் அங்குள்ள பிட்ச் கண்டிஷனை நன்றாக புரிந்து கொண்டு விளையாடி வருகிறோம்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை சென்றபோது அங்கு விளையாடிய அனுபவம் இருக்கிறது. அந்த கண்டிஷன் எங்களுக்கு நன்றாக பழகிவிட்டது. இந்தியாவிற்கு செல்லும்போதும் கண்மூடித்தனமாக செல்லாமல், இந்தியாவில் இருக்கும் பிட்ச் போன்று உருவாக்கி அதில் தீவிரமாக பயிற்சி செய்துவிட்டு செல்வோம்.

இன்னும் இரண்டு வார காலங்கள் இருக்கின்றன. அவர்களை சொந்த மண்ணில் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். வெற்றி பெறுவதற்கும் தயாராக இருக்கிறோம். இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் எனக்கு ஆவலை கூட்டியுள்ளது. அதே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். நாங்கள் நல்ல பார்மில் இருப்பதால் இந்தியாவில் டெஸ்ட் தொடரில் வெல்வதற்கு இது மிகச்சிறந்த வாய்ப்பு.” என்றார்.