டி20 உலகக்கோப்பைக்கு நாங்கள் சரியான அணியோடு தயாராகவே இருக்கிறோம் – பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை!

0
352
Rahul Dravid

ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் டி20 உலகக்கோப்பை போட்டி நடக்க இருக்கிறது. இதில் பிரதான 12 அணிகள் கொண்ட சுற்றுக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 4 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றன. இந்தத் தகுதி சுற்று போட்டிகள் அக்டோபர் 16ஆம் தேதி துவங்குகிறது. இதன் முடிவில் அக்டோபர் 22-ஆம் தேதி பிரதான சுற்று போட்டி துவங்குகிறது. இந்திய அணி அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடக்கிறது!

இந்த டி20 உலகக் கோப்பை போட்டிக்காக கடந்த சில வாரங்களில் கலந்து கொள்ளும் எல்லா அணிகளும் தங்களின் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தனர். இப்படி அறிவிக்கப்பட்ட அணியில் அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் ஏதாவது மாற்றங்கள் தேவை என்றால் செய்து கொள்ளலாம்.

இந்திய அணி தனது 15 பேர் கொண்ட அணியாக, கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் கே எல் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, சாகல், ரவிசந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்சல் படேல் ஆகியோரை அறிவித்தது. மேலும் முஹம்மத் சமி, ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் சாகர், ரவி பிஷ்னோய் ஆகிய நால்வரை ரிசர்வ் வீரராக அறிவித்தது.

இந்த நிலையில் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா தென்ஆப்பிரிக்கா அணியுடனான டி20 தொடரிலும், அடுத்து நடக்கும் டி20 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது உலக கோப்பையில் பங்கேற்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

தற்போது டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் தயாரிப்பு பற்றி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்
” நாங்கள் விரும்பும் வீரர் சேர்க்கைகள், மற்றும் நாங்கள் விரும்பும் பிளேயிங் 11-ல் விளையாடக்கூடிய வீரர்களைப் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் உலகக் கோப்பைக்கு என்ன மாதிரியான திறமைகள் கொண்ட வீரர்களை எதிர்பார்த்தோமோ அப்படியான வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” பொதுவாக காயங்கள் மற்றும் பிற காரணிகளால் எல்லா விஷயங்களும் நமக்கு சரியாக அமைந்து விடாது. அப்போது எங்களிடம் இருக்கும் வீரர்கள் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்கள். எங்களிடம் இருக்கும் அணி வசதியானது. நாங்கள் ஆஸ்திரேலிய மைதானங்கள் மற்றும் விளையாடக்கூடிய எதிரணி களுக்கு தேவையான பிளேயிங் லெவனை அமைக்கக் கூடிய அளவில் வீரர்கள் விஷயத்தில் வசதியாகவே இருக்கிறோம். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில், நீங்கள் வெவ்வேறு மைதானங்களில் வெவ்வேறு அணிகளுடன் முதல் சுற்றில் விளையாடுவீர்கள். எனவே உங்கள் அணியில் உள்ள வீரர்கள் கொஞ்சம் பன்முகத் தன்மையோடு இருக்க வேண்டும். அல்லது உங்கள் அணியில் நீங்கள் எதிர்த்து விளையாடும் அணிக்கு ஏற்றவாறு திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்கள் இருக்க வேண்டும். நாங்கள் இந்த விஷயத்தில் மிகத் தெளிவாக தான் இருந்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன் ” என்று நம்பிக்கையாக விரிவாக கூறியிருக்கிறார்!