இந்தியா கப் வின் பண்ணும்னு நினைக்கிறாங்க, நாங்க அப்சட் பண்ணுவோம்; பாத்துட்டே இருங்க – பங்களாதேஷ் கேப்டன் சாகிப் அல் ஹசன் ஆணவ பேச்சு!

0
597

இந்திய அணியை அப்செட் செய்வதற்கு காத்திருக்கிறோம் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஆணவமாக பேசியுள்ளார் பங்களாதேஷ் அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன்.

உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது நான்காவது சூப்பர் 12 போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் இந்திய அணி உள்ளது.

மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெற்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதி ஆகிவிடும். ஆகையால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டி இந்தியாவிற்கு மிக முக்கியமானது, வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்திலும் இருக்கிறது.

மேலும் இந்திய அணி இந்த டி20 உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் ஒரு அணிகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு என்னென்ன குறைகள் இருக்கிறது என்பதை தெளிவாக நம்மால் பார்க்க முடிந்தது. அதனை சரி செய்து கொண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக அபாரமாக செயல்படுவோம் என ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு ராகுல் டிராவிட் மற்றும் வங்கதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணியை வீழ்த்துவதற்கு என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்? மேலும் இப்போட்டியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு சாகிப் அல் ஹசன் பதில் அளித்தார்.

“நாங்கள் இங்கு கோப்பையை வெல்வதற்காக வரவில்லை. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் எங்களது பெஸ்ட் கொடுத்து வருகிறோம். இந்திய அணியின் நிலை அப்படி அல்ல. அவர்கள் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருக்கின்றனர். நாங்கள் வென்றால் அது அவர்களுக்கு அப்செட். நிச்சயம் அப்செட் செய்வதற்கு நாங்கள் முழு முனைப்புடன் இருக்கிறோம். எங்களது வீரர்கள் அதற்கு தயாராகவும் இருக்கின்றனர்.” என்றார்.

ராகுல் டிராவிட் பேசுகையில், “வங்கதேச அணி எளிதான அணி கிடையாது. எந்த நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் அவர்கள் எழுந்து வரலாம் என்பதால் நாங்கள் எங்களது திட்டத்தில் முழு கவனத்துடன் இருக்கிறோம். அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.” என்றார்.

இவ்விருணிகளும் உலகக்கோப்பை தொடரில் மோதிக்கொண்டபோது, ஒரு முறை கூட இந்திய அணி வங்கதேச அணியிடம் தோல்வியை தழுவியது இல்லை. அதேபோல் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இரு அணிகளும் 11 முறை டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ஒரு முறை மட்டுமே இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.