மும்பைக்கு எதிராக சென்னை அணி படுதோல்வி அடைந்ததைக் கலாய்த்த யுவராஜ் சிங் – வீடியோ இணைப்பு

0
83
Yuvraj Singh teasing CSK loss against MI

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 59வது போட்டியில், ஐ.பி.எல் வரலாற்றின் தலைசிறந்த அணிகளான சென்னை அணியும், மும்பை அணியும், மும்பையின் வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை. இவர்கள் மோதிக்கொள்ளும் ஆட்டம் என்றாலே, அன்றைய நாள் போட்டியை ஒளிப்பரப்பும் தொலைக்காட்சிக்குக் கொண்டாட்டம்தான். காரணம், இவர்கள் மோதிக்கொள்ளும் போட்டிக்கு அந்தளவிற்கு இரசிகர்களின் வரவேற்பு இருக்கும். இந்த ஆட்டம் ஐ.பி.எல்-ன் எல்-கிளாசிக்கோ என்று சொல்லப்படுவது உண்டு.

மும்பை அணி ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்திருக்க, சென்னை அணிக்கு ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பு நூலிழை அளவு இருந்த நிலையில், நேற்று டாஸில் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். வேண்டாதவர்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்ததைப் போல, பேட்டிங் செய்ய களத்துக்கு வந்த சென்னை பேட்ஸ்மேன்கள் வேகவேகமாக கிளம்ப, சென்னை 97 ரன்களுக்கு சுருண்டது. பின்பு அடுத்துக் களமிறங்கிய மும்பை அணி பேட்ஸ்மேன்களும், சென்னை அணி பேட்ஸ்மேன்கள் போலவே வெளிநடப்பு செய்ய, ஆட்டத்தில் 97 ரன்களுக்கே உயிர் இருந்தது. ஆனால் திலக் வர்மாவின் பொறுப்பான ஆட்டத்தால் இறுதியில் மும்பை அணி வென்றதோடு, ப்ளேஆப்ஸ் சுற்றுக்குச் சென்னை அணிக்கு இருந்த நூலிழை அளவு வாய்ப்பையும் அறுத்துவிட்டது!

நேற்று சென்னை அணி 97 ரன்களுக்கு சுருண்டிருக்க, இந்தூர் நகரில் நடந்த கால்பந்து போட்டி ஒன்றே காண்பதற்காக, முன்னாள் சென்னை வீரரான ரெய்னாவும், ஐ.பி.எல்-ல் சில அணிகளுக்கு ஆடியுள்ள பிரபல இந்திய வீரர் யுவராஜ் சிங்கும் சென்றிருந்தனர். அப்போது யுவராஜ் சிங் தன் அலைபேசியில் விளையாட்டாய் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில், யுவராஜ் சிங் சுரேஷ் ரெய்னாவிடம், “உன் அணி 97 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகிருக்கிறது. இப்போது இதைப்பற்றி நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்க, அதற்கு சுரேஷ் ரெய்னா “நான்தான் இப்போது அணியில் இல்லையே!” என்று பதிலளித்திருக்கிறார். இந்த வீடியோ எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைக் கலாய்த்திருக்கிறார்.

சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்காக 11 சீசன்கள் பங்கேற்று இருக்கிறார். அவரின் மொத்த 5528 ரன்களில், 4687 ரன்களை சென்னை அணிக்காக குவித்திரக்கிறார். கடந்த சீசனில் 12 போட்டிகளில் 160 ரன்களை மட்டுமே எடுக்க, சென்னை அணி அவரை இந்த ஆண்டு மெகா ஏலத்தில் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை இரசிகர்களால் மிஸ்டர் ஐ.பி.எல் என்று அழைக்கப்படும் இவரை, சென்னை அணி ஏலத்தில் வாங்காததால், சென்னை அணி இரசிகர்களாலே, சென்னை அணி நிர்வாகம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது!