2வது இலங்கை டெஸ்ட்டில் பெங்களூரு ரசிகர்களுக்கு தனது நண்பர் ஏபி டிவிலியர்ஸ் போல மைதானத்தில் விளையாடிக் காண்பித்த விராட் கோலி – விடியோ இணைப்பு

0
409
Virat Kohli Shows love for RCB Fans in Pink ball test

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடரின் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.

பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் குவித்தார். இலங்கை அணியில் சிறப்பாக பந்து வீசிய லசித் எம்புல்தெனியா மற்றும் பிரவீன் ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

- Advertisement -

பின்னர் விளையாடிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் குவித்துள்ளது. இலங்கை அணியில் முதல் இன்னிங்சில் அதிக பட்சமாக மேத்யூஸ் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசி வரும் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி வருகிறார். 166 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி இன்னும் சற்று நேரத்தில் விளையாடப் போகிறது.

வானுயர கோஷமிட்ட பெங்களூரு அணி ரசிகர்கள்

நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். விராட் கோலி பிறந்த ஊர் டெல்லி என்றாலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பெங்களூருவில் உள்ளனர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஐபிஎல் தொடரில் 2008 முதல் தற்போது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாடி வரும் ஒரே வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

நேற்று விராட் கோலியின் பேட்டிங் விளையாட வந்த பொழுது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் கோலி கோலி என்று சத்தமாக தங்களது கர கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமின்றி விராட் கோலி ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கையில் அவரது பெயர் மற்றும் அவருடைய நண்பர் ஏபி டிவிலியர்ஸ் பெயரையும் வானுயர கேட்கும்படி கத்தினர்.

- Advertisement -

பெங்களூரு அணியில் இவர்கள் இருவரும் இணைந்து பல போட்டிகளில் அந்த அணியை தாங்கிப் பிடிக்கின்றனர். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் பெங்களூரு அணியின் ஒரு கண் விராட் கோலி என்றால் மற்றொரு கண் ஏபி டிவிலியர்ஸ் தான். விராட் கோலியின் பெயரை ரசிகர்கள் கோஷமிட்டபடி டிவில்லியர்ஸ் பெயரையும் கோஷமிட்டனர்.

ஏபி டிவிலியர்ஸ் போல பாவனை செய்த விராட் கோலி

ஏபி டிவிலியர்ஸ் பெயரை கோஷமிட்ட வேளையில் மைதானத்தில் இருந்த விராட் கோலி சத்தம் சரியாக கேட்கவில்லை என்பது போல சைகை காட்ட ரசிகர்கள் மேலும் பலத்த சத்தத்துடன் ஏபி டிவில்லியர்ஸ் பெயரை ஒன்றாக இணைந்து கோஷமிட்டனர். பின்னர் விராட் கோலி ஏபி டிவிலியர்ஸ் வழக்கமாக ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிப்பது போல பாவனை செய்து காட்டினார். அதைக் கண்ட ரசிகர்கள் இன்னும் உற்சாகமாகி பலத்த சத்தத்துடன் கோஷமிட்டு கொண்டே இருந்தனர்.

விராட் கோலி அவ்வாறு சைகை மற்றும் பாவனை செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.