சிராஜ்க்கு டிப்ஸ் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுக்க உதவிய விராட் கோலி – வைரல் ஆகிய வீடியோ இணைப்பு

0
207
Virat Kohli and Mohammad Siraj

இந்திய அணி இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்து, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என வென்றது. டி20 போட்டிகளில் முதலில் பேட் செய்து இலக்கை நிர்ணயிப்பதில் இந்திய அணிக்கு இருந்த பிரச்சினை, இந்தத் தொடரில் சரி செய்யப்பட்டது. தைரியமான அணுகுமுறையைக் கையில் எடுத்து இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்குதல் பாணியில் விளையாடி ரன் குவித்தார்கள்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி முதல் போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாய் வென்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி நூறு ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாய் வென்றது. இதையடுத்து தொடர் 1-1 சம நிலையை எட்டியது. முதல் போட்டியில் இடுப்பு பகுதியில் உண்டான வலியால் விளையாடாத விராட் கோலி இரண்டாவது போட்டியில் விளையாடினார்.

- Advertisement -

இந்த நிலையில் தொடர் யாருக்கென முடிவாகும் கடைசிப்போட்டி இன்று மான்ஸ்செஸ்டர் ஓல்ட் டிராப்போர்டில் மதியம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. பும்ராவுக்கு ஒரு சிறிய காயம் என்பதால் அவருக்குப் பதிலாக முகமத் சிராஜ் இடம்பெற்றார். இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற ஒன்பது ஒருநாள் போட்டிகளில் எட்டு ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணியே வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது!

மொகம்மத் ஷமி முதல் ஓவரை வீச, அந்த ஓவரை முழுமையாக எதிர்கொண்ட இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் மூன்று பவுண்டரிகளை அடித்தார். அதற்கடுத்த இரண்டாவது ஓவரை முகம்மத் சிராஜ் வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ஜானி பேர்ஸ்டோவை முகம்மத் சிராஜ் வெளியேற்றினார். ஜானி பேர்ஸ்டோ ஆட எட்ஜ் எடுத்த பந்து மிட்-ஆப் திசையில் நின்ற ஸ்ரேயாஷ் ஐயரிடம் கேட்ச்சாக மாறியது. அடுத்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் வர, முதல் இரண்டு பந்துகளை உள்ளே, வெளியே என வைத்த சிராஜ், ஓவரின் கடைசிப் பந்தை, கொஞ்சம் அவுட் ஸ்விங்காக புல் லென்த்தில் வைத்து வீச, அதை ஜோ ரூட் ஆடமுடியாது எட்ஜ் எடுத்து பந்து, இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ச் ஆனது. இதனால் ஜோ ரூட்டும் ரன் ஏதும் இல்லாமல் வெளியேறினார்.

இந்த ஆட்டத்தில் இரண்டாவது ஓவரை முகம்மத் சிராஜ் வீச வந்ததுமே விராட் கோலி அவரிடம் வந்து, எந்த லைன் & லென்த்தில் பந்துவீசுவது என அவரிடம் விளக்கினார். ஜானி பேர்ஸ்டோ ஆட்டமிழந்து ஜோ ரூட் விளையாட வந்ததும், ஜோ ரூட் ஆட்டமிழந்த பந்தை சிராஜ் வீசுவதற்கு முன், அவரிடம் மீண்டும் சென்ற விராட் கோலி பந்துவீச்சு தொடர்பாகப் பேசினார். அதைக் கேட்டு ஆமோத்திவிட்டு சென்று சிராஜ் வீச ஜோ ரூட் ஆட்டமிழந்தார். ஐ.பி.எல் தொடரில் முகம்மத் சிராஜின் ஆரம்பம் ரொம்ப சுமாராய் இருந்தபோதும், அவரைத் தொடர்ந்து ஆதரித்ததோடு, இந்திய அணியின் உள்ளேயும் கொண்டுவந்து நிறுத்தியதில் விராட் கோலியின் பங்கு மிகப்பெரியது. முகம்மத் சிராஜிக்கு ஐ.பி.எல் தொடரிலும், இந்திய அணியிலும் விராட் கோலி கேப்டனாய் இருந்து வழிநடத்திய அனுபவம், இன்று களத்தில் கைக்கொடுத்தது தெளிவாகத் தெரிந்தது!

- Advertisement -