” கைத்தட்டிக் கொண்டே இருங்க பாய்ஸ் ” மைதானத்திற்கு வெளியில் இருக்கும் வீரர்களை உற்சாகப் படுத்துமாறு கேட்டு கொண்ட கோலி – வீடியோ இணைப்பு

0
219
Virat Kohli asks the dugout Players to Cheer

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நலம் கருதி போட்டி நடக்கும் மைதானங்களில் ரசிகர்கள் உள்ளே வந்து போட்டியை காண அனுமதி மறுக்கப்பட்டதால், இரு அணியும் ரசிகர்கள் இன்றி விளையாடி வருகிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டி முடிவில் இந்திய அணி ஒரு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று தற்போது தொடரில் சமநிலையில் உள்ளது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி போட்டி தற்போது கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்திய அணி பந்து வீச்சாளர்களுக்கு கைதட்ட சொன்ன விராட் கோலி

போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் முடிவில் 223 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் குவித்தார்.

அதன் பின்னர் விளையாட தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்து சிறப்பான நிலையில் இருந்தது. ஐந்தாவது விக்கெட்டை கைப்பற்றிய இந்திய அணி பந்துவீச்சாளர்கள் கடுமையான முயற்சி செய்து கொண்டிருந்த பொழுது, கேப்டன் விராட் கோலி டக் அவுட்டில் ( பெஞ்ச்சில் ) இருந்த இந்திய அணி வீரர்களை கைதட்டி உற்சாகப்படுத்த சொன்னார்.

டக் அவுட்டில் அமர்ந்து இருந்த முகமது சிராஜ், விருத்திமான் சகா மற்றும் போட்டியை இதர இந்திய வீரர்கள் ஒன்றாக இணைந்து போட்டியை காண வந்த ரசிகர்கள் போல இந்திய அணிக்கு கைதட்டி உற்சாகம் அளித்தனர். அவர்கள் உற்சாகம் அளித்த ஒரு சில நிமிட இடைவெளியில் முகமது ஷமி 55ஆவது ஓவரில் போட்டியில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை ( வேன் டெர் டஸ்சென் மற்றும் பவுமா ) கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் ஜஸ்பிரித் பும்ரா 63வது ஓவரில் மார்கோ ஜென்சென் விக்கெட்டையும், 65வது ஓவரில் கீகன் பெட்டர்சன் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக 159 ரன்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த தென்ஆப்பிரிக்கா அணி, பின்னர் 179 ரன்களுக்குள் 8 ( 20 ரன்கள் இடைவேளையில் 4 விக்கெட்டுகள்) விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக அந்த அணி போட்டியின் முடிவில் 210 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. விராட் கோலி அவ்வாறு வீரர்களை உற்சாகப்படுத்த சொன்னது மிகப் பெரிய அளவில் இந்திய அணிக்கு கைகொடுத்துள்ளது.

தற்போது 2-வது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்க அணியை விட 169 ரன்கள் முன்னிலையில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 71* ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி வருகிறார்.