1068 நாட்களுக்குப் பின் உஸ்மான் கவாஜாவின் சதம் ; மகிழ்ச்சி பொங்க கொண்டாடிய அவரது மனைவி மற்றும் குழந்தை – வீடியோ இணைப்பு

0
806
Usman Khawaja Century and Family Celebration

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் 3 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்ட நிலையில், சம்பிரதாயமாக மீதமுள்ள இரண்டு போட்டிகளில் 4வது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சுமார் 134 ஓவர்கள் பிடித்து 8 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியா இன்று டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 260 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் குவித்து அசத்தினார். இங்கிலாந்து பந்து வீச்சாளர்களில் ஸ்டூவர்ட் பிராட் 29 ஓவர்களில் 101 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதிரடியான கம்பேக் கொடுத்த கவாஜா

ஆஸ்திரேலிய வீரரான உஸ்மான் கவாஜா 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு எந்தவித ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. சரியாக 2 வருடம் மற்றும் 4 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நீண்டநாள் வாய்ப்பு கிடைக்காத அந்த வேகத்தை தன்னுடைய நிதானமான ஆட்டத்தில் உஸ்மான் கவாஜா வெளிப்படுத்தினார். ஒவ்வொரு பந்தையும் கவனமாக கணித்து நீண்ட நேரம் அவர் விளையாடிய விதம் மைதானத்தில் இருந்த அனைத்து ஆஸ்திரேலிய ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியது.

அவரது சதத்தை கொண்டாடிய அவரது மனைவி மற்றும் குழந்தை

உஸ்மான் கவாஜா சதம் அடித்த அடுத்த நொடியே அவரது மனைவி ரேச்செல் மற்றும் அவரது பெண் குழந்தை ஆயிஷா அவருடைய சதத்தை சந்தோசமாக கொண்டாடினர். முதலில் அவரது மனைவி தன் குழந்தையை கையில் பிடித்தவாறு, தன்னுடைய கணவரின் சதத்தை எதிர்நோக்கி ஆவலாக காத்துக் கொண்டிருந்தார். உஸ்மான் கவாஜா சதம் அடித்த அடுத்த நொடியே எழுந்து நின்று மகிழ்ச்சி பொங்க தனது குழந்தையுடன் அவர் கொண்டாடினார்.

அவரது கையில் இருந்த உஸ்மான் கவாஜாவின் குழந்தையும் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து, தன்னுடைய தந்தையின் சதத்தை கொண்டாடியது. அவர்கள் இருவரும் இணைந்து கொண்டாடிய வீடியோவை ஆஸ்திரேலிய அணி சமூக வலைதளங்களில் வெளியிட்டது. மகிழ்ச்சியான தருணத்தை சரியாக படம்பிடித்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் வெளியிட்ட அந்த வீடியோவை, தற்போது அனைத்து ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்று 2ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி அதனுடைய முதல் இன்னிங்சில் 5 ஓவர்களில் எந்தவித விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் குவித்து, 403 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.