இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் காவலர்களை மீறி மைதானத்துக்குள் நுழைந்து விராட் கோலியுடன் செல்பி எடுத்துக் கொண்ட ரசிகர்கள் – வீடியோ இணைப்பு

0
116
Virat Kohli and Fan Selfie

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் 100 சதவீத பார்வையாளர்களுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விராட் கோலிக்கு பெங்களூருவில் ரசிகர்கள் அதிகம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஐபிஎல் தொடர் ஆரம்பித்த வருடம் முதல் இன்றுவரை அவர் பெங்களூரு அணியின் ராஜ விசுவாசியாக விளையாடி வருகிறார். நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் அவரது ரசிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து “கோலி கோலி கோலி” என்று பலத்த கரகோஷம் எழுப்பினர்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவு பெறுவதற்கு முன்பாக திடீரென 3 ரசிகர்கள் மைதானத்துக்குள்ளே நுழைந்து விட்டனர். அதில் இருவர் காவலர்கள் அனைவரையும் தாண்டி விராட் கோலியிடம் சென்று கை கொடுத்து, அவரிடம் செல்பியும் எடுத்துக்கொண்டனர். ரசிகர்கள் அவ்வாறு ஓடி விராட் கோலியிடம் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறுமா இந்திய அணி ?

நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே குவித்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 43 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

143 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இன்று 9 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இன்று 2வது இன்னிங்சிலும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 67 ரன்கள் குவித்தார்.

447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. ஏறுபவர் விளையாடி 27 ரன்கள் குவித்து ஒரு விக்கெட்டை இன்றைய நாள் முடிவில் இலங்கை அணி இழந்துள்ளது. போட்டி நிறைவு பெற இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் மீதமுள்ள 9 விக்கெட்டுகளையும் இந்திய அணி கைப்பற்றி 2-0 என்கிற கணக்கில் டெஸ்ட் தொடரை வெல்லுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.