சூர்யகுமார் யாதவ் இரட்டைச் சதம் ; கிடைத்த பரிசுத் தொகையை அன்பளிப்பாக அளித்து நெகிழ்ச்சிப் பேச்சு – வீடியோ இணைப்பு

0
1177
Suryakumar Yadav

இந்த ஆண்டிற்கான போலீஸ் இன்விடேஷன் ஷீல்டு கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவு பெற்றது. தொடரின் இறுதிப்போட்டியில் பையாடே ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் பார்சி ஜிம்கானா அணியும் மோதின. போட்டியில் டாஸ் வென்ற பையாடே ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய பார்சி ஜிம்கானா அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 524 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 249 ரன்கள் குவித்து அசத்தினார்.

பின்னர் விளையாடிய பையாடே ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் இன்னிங்ஸை முடிவில் 171 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 2-வது இன்னிங்சில் விளையாடிய பார்சி ஜிம்கானா அணி 174 ரன்கள் குவித்து, பையாடே ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு 553 ரன்களை இலக்காக அமைத்தது. ஆனால் போட்டியின் முடிவில் பையாடே ஸ்போர்ட்ஸ் கிளப் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. போட்டியின் விதிமுறைப்படி பார்சி ஜிம்கானா அதிக ரன் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்ததால், அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை முழுவதுமாக கொடுத்த சூர்யகுமார்

போட்டியின் முதல் இன்னிங்சில் 152 பந்துகளில் 37 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என மொத்தமாக 249 ரன்கள் குவித்து பார்சி ஜிம்கானா அணிக்கு மிகப்பெரிய துவக்கம் கொடுத்த காரணத்தினால், ஆட்டநாயகன் விருது சூர்யகுமார் யாதவிற்கு வழங்கப்பட்டது. போட்டி முடிந்தவுடன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை அந்த மைதானத்தின் பராமரிப்பாளர்களுக்கு அப்படியே அவர் கொடுத்துவிட்டார்.

மைதான பராமரிப்பாளர்கள் படும் வேதனையை எடுத்துக்கூறிய சூர்யகுமார் யாதவ்

பரிசு தொகையை அவர்களுக்கு கொடுப்பதற்கான காரணத்தையும் அவர் விளக்கிக் கூறினார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் மைதானத்தில் விளையாடத் தொடங்கி பின்னர் நாளடைவில் மிகப்பெரிய உச்சத்திற்கு செல்கிறார்கள்.அவர்கள் எல்லோரையும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாடுவது போல மைதானத்தில் வேலை செய்யும் பராமரிப்பாளர்களை கொண்டாடுவதில்லை.

ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் மைதானத்தில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் அந்த மைதானம் விளையாடுவதற்கு ஏற்ப சிறப்பாக இருந்தாக வேண்டும். மைதானத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் வருவதற்கு முன்பாகவே அதிகாலையில் வந்து மைதானத்தை சுத்தம் செய்து, விளையாடுவதற்கு ஏற்றவாறு மைதானத்தை ஏற்பாடு செய்வதில் நிறைய வேலைச்சுமை இருக்கிறது. அவை அனைத்தையும் நான் சிறுவயதிலிருந்து பார்த்து இருக்கிறேன்.

- Advertisement -

சிறுவயதில் நான் மைதானங்களில் பயிற்சி எடுக்கும் பொழுது அவர்களுக்கு எனது நண்பர்களுடன் சேர்ந்து உதவியும் இருக்கிறேன். அவர்களுக்கு உதவ வேண்டியது ஒரு கடமையாக நினைக்கிறேன். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இதுபோல மைதான பராமரிப்பாளர்களுக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுப்பதாக சூர்யகுமார் யாதவ் உருக்கமாக பேசியுள்ளார்.

எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் வளர்ந்து வந்த பாதையை மறக்க கூடாது

மேலும் பேசிய அவர், எந்த ஒரு கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வளர்ந்து வந்த பாதையை மறந்து விடக்கூடாது. லோக்கல் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பின்னர் கிளப் மற்றும் இந்திய அணியில் நான் விளையாடி வருகிறேன். இந்திய அணியில் இடம் கிடைத்து விட்ட காரணத்தினால் என்னுடைய கிளப் கிரிக்கெட்டை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அங்கேயும் சென்று விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.

இப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெவ்வேறு தொடர்களில் வெவ்வேறு மைதானங்களில் விளையாடும் பட்சத்தில் என்னுடைய ஆட்டமும் மேம்படும். இது என்னுடைய கிரிக்கெட் கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் சூர்யகுமார் யாதவ் கூறி முடித்தார்.