ஐ.பி.எலில் தோனி அவுட் ஆன வீடியோவை பதிவிட்டு நக்கலாக பிறந்தநாள் வாழ்தது தெரிவித்த ஶ்ரீசாந்த் – வீடியோ இணைப்பு

0
261
Sreesanth and MS Dhoni

இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிக்கரமான, இரண்டு உலகக்கோப்பைகளையும், சாம்பியன்ஸ் டிராபியையும் வென்ற மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று. அவரது இரசிகர்கள் மட்டும் அல்லாது, அவருடன் விளையாடிய வீரர்கள், பல முன்னாள் வீரர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்நாள் வீரருமான விராட் கோலி தன் வாழ்த்தில் மகேந்திர சிங் தோனியை தலைவர் என்றும், தன் மூத்த சகோதரன் என்றும் குறிப்பிட்டு வாழ்த்தி இருந்தார். ஹர்திக் பாண்ட்யா தனது வாழ்த்துக் குறிப்பில் டார்லிங் என்று குறிப்பிட்டு வாழ்த்தி இருக்கிறார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணையதள பக்கத்தில் பிராவோவின் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு உள்ளது.

- Advertisement -

கிரிக்கெட் உலகை எடுத்துக்கொண்டால் எந்தவித சச்சரவுகளும், சரிவும் இன்றி கேப்டன்சியை அடுத்த வீரருக்கு கைமாற்றி விட்டு, அந்த வீரரின் கேப்டன்சியிலேயே முன்னணி வீரராகவும், அந்த வீரரின் வழிக்காட்டியாவும் இருந்தவர் மகேந்திர சிங் தோனி மட்டும்தான். அந்த அளவில் அணியை தொலைநோக்காக வழிநடத்தி வந்து விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து, அவரது தலைமையிலேயே விளையாடவும் செய்தார்.

அதேபோல் தனது கேப்டன்சியில் வீரர்களை ஒரு பயிற்சியாளர் போலவும் இருந்து வழிநடத்தி இருந்தார். இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யாவை ஆரம்பக் காலங்களில் அதிக அழுத்தங்கள் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அவர் களத்தில் தவறுகள் செய்து, அவராகவே அனுபவப்பட நிறைய வாய்ப்புக்களைக் கொடுத்தார். இதையெல்லாம் நினைவு கூர்ந்து ஹர்திக் பாண்ட்யா விரிவாகவே பேசியிருப்பார். மேலும் ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட பொழுது, தான் தோனியின் கேப்டன்சியையே பின்பற்றுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த அளவில் கேப்டன் பொறுப்பில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிகளைக் குவித்ததோடு மட்டும் இல்லாமல், அணி வீரர்களின் அன்பையும் பெற்றவர் தோனி.

இன்று அவரது பிறந்த நாளுக்கான வாழ்த்துச் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்ரீசாந்த், தான் மகேந்திர சிங் தோனியை யார்க்கர் வீசி கிளீன் போல்ட் செய்த வீடியோவை பதிவிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி, தான் யாருக்கும் வீசியதில் சிறந்த பந்து என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இது இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

- Advertisement -

2013ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பெட்டிங், ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்ட புகார்கள் எழுந்ததில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஸ்ரீசாந்தும் ஒருவர். வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு, சமீபத்தில் உச்ச நீதி மன்றம் போய், வாழ்நாள் தடையை உடைத்துக்கொண்டு வந்து கேரள அணிக்கான மாநில போட்டிகளில் பங்கேற்றார். மேலும் சினிமாவில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது!