முக்கியமான போட்டியில் பும்ரா விலகியதற்கு காரணம் இதுதான் ! மாற்று வீரராக வந்து முதல் ஓவரிலயே 2 முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜ்

0
326
Mohammad Siraj in place of Jasprit Bumrah

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றது. ஆனால் அதற்குப் பின்பு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் இரண்டு ஆட்டங்களை அபாரமாய் வென்று, தொடரை 2-1 என கைப்பற்றியது!

இதற்கடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இலண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரீட் பும்ரா 19 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல முக்கியக் காரணமாய் இருந்தார்.

- Advertisement -

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு இங்கிலாந்து அணியை 246 ரன்களுக்கு தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சரியாகச் செயல்படாததால், இங்கிலாந்து அணி நூறு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதல் ஒருநாள் போட்டியில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் விளையாடாத விராட் கோலி இந்தப் போட்டியில் விளையாடினார்.

இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி, தற்போது மான்செஸ்டர் ஓல்ட்டிராப் போர்ட் மைதானத்தில் சற்றுமுன் துவங்கி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட் இரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, பந்துவீச்சு பார்மில் உச்சத்தில் இருக்கும் ஜஸ்ப்ரீட் பும்ரா இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. பும்ராவிற்கு ஒரு சிறிய நிக்கில் காயம் உள்ளதால், இந்திய அணி நிர்வாகம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. பும்ராவிற்குப் பதிலாக முகமத் சிராஜ் இடம்பெற்று விளையாடி வருகிறார்!

- Advertisement -

தற்போது போட்டி நடந்து வரும் மான்ஸ்செஸ்டர் ஓல்ட்டிராப் போர்ட் மைதானத்தில், கடைசியாக நடந்த ஒன்பது ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணியே வென்று இருக்கிறது. ஆனால் இந்தப் புள்ளி விபரத்தை தாண்டி ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

கேப்டன் ரோகித் சர்மாவின் முடிவு சரி என்பது போல, பும்ராவிற்குப் பதிலாய் இடம்பெற்ற முகம்மத் சிராஜ், ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் அட்டகாசமான பேட்டிங் பார்மில் இருக்கும் ஜானி பேர்ஸ்டோ, நட்சத்திர வீரர் ஜோ ரூட் இருவரையும், ரன் எதுவும் அடிக்க விடாமல் டக் அவுட் செய்து வெளியேற்றி அசத்தினார்!