நாக் அவுட் போட்டிக்குத் தகுதி பெறாததால் தந்தையால் நாக் அவுட் செய்யப்பட்ட ஷிகர் தவான் – வீடியோ இணைப்பு

0
1260
Shikhar Dhawan and his Father

நடப்பு ஐ.பி.எல் தொடரில் புதிய அணிகளான குஜராத், லக்னோ அணிகளும், ராஜஸ்தான், பெங்களூர் அணிகளும் ப்ளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கின்றன. டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, மும்பை அணிகள் வெளியேறி இருக்கின்றன. இதில் சென்னை, மும்பை அணிகளுக்கு இந்த ஆண்டுதான் மோசமான சீசனாக இருந்திருக்கிறது.

நடப்பு ஐ.பி.எல் தொடருக்காக இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தில் பஞ்சாப், டெல்லி அணிகள் பல கிரிக்கெட் விமர்சகர்களின் பாராட்டை பெற்றிருந்தன. இவர்கள் அணியை உருவாக்கியிருந்த விதத்தைப் பார்த்து, பலர் தங்களின் ப்ளேஆப்ஸ் அணிகளுக்கான கணிப்பில் இவர்களுக்கு இடமளித்து இருந்தார்கள். ஆனால் அந்தக் கணிப்பெல்லாம் தற்போது பொய்யாகி இருக்கிறது.

- Advertisement -

பஞ்சாப் அணி சாதாரணமாக விளையாடி இருந்தாலே டெல்லி அணியுடன் வென்றிருக்க வேண்டிய ஆட்டத்தில் தோற்று, கடைசி ஆட்டத்தில் சுலபமாக ஹைதராபாத் அணியை வீழ்த்தி ப்ளேஆப்ஸ் வாய்ப்பை இழந்து வெளியேறி இருந்தது. ஆனால் பஞ்சாப் டெல்லி அணியிடம் இருந்து வாங்கிய ஷிகர் தவான் இந்த ஐ.பி.எல் தொடரிலும் பதினான்கு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி 460 ரன்களை குவித்திருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்தே ஷிகர் தவான் 400 ரன்களுக்கு குறைவாய் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சூழலில், ஐந்து இருபது ஓவர் போட்டிகள் விளையாட ஜூன் முதல் வாரத்தில் இந்தியா வரும் தென்ஆப்பிரிக்க தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாகவும், ஹர்திக் பாண்ட்யா இல்லை ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற யூகங்கள் கிளம்பி இருந்தது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த தொடருக்கான அறிவிக்கப்பட்ட அணியில் ஷிகர் தவானின் பெயர் இடம்பெறவில்லை.

இது குறித்துப் பேசிய இந்திய முன்னாள் பிரபல வீரர் வீரேந்திர சேவாக், இது ஷிகர் தவானை நிச்சயம் வருத்தமடைய வைத்திருக்கும் என்றும், அவர் சுற்றுப்புறத்தை கலகலப்பாக வைத்திருக்கும் வேடிக்கையான மனிதர் என்று கூறியிருந்தார். ஷிகர் தவானும் வேடிக்கையாக நகைச்சுவையாக ரீல்ஸ்கள் செய்து வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். தற்பொழுது ப்ளேஆப்ஸ் வாய்ப்பை இழந்து வீட்டிற்கு திரும்பியவர், தன் தந்தை தன்னை அறைவதாக, இந்தி படத்திலிருந்து ஒரு காட்சியை எடுத்து ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, நாக்அவுட் போட்டிகளுக்குச் செல்லாததால் தந்தையால் நாக்அவுட் செய்யப்பட்டேன் என்று தலைப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்ப்பதற்கே நகைச்சுவையாக இருக்கிறது!

- Advertisement -