ரஞ்சி இறுதிபோட்டியில் அதிரடி சதம் ; எகிறி குதித்து கர்ஜித்த சர்ப்ராஸ் கான் – வீடியோ இணைப்பு

0
147
Sarfaraz Khan century in ranju trophy final

இளம் இந்திய கிரிக்கெட் திறமைகளைக் கண்டறிவதற்கான ஒரு முக்கியக் களமாக 87 ஆண்டுகளாக விளங்கி வருவது ரஞ்சி டிராபி டெஸ்ட் தொடராகும். இளம் வீரர்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பார்ம் இழந்த வீரர்கள், இழந்த பார்மை திரும்ப பெறவும் ரஞ்சி போட்டிகள் உதவியாக இருந்து வருகிறது.

கோவிட் தொற்றுக் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்த ரஞ்சி தொடர், இந்த ஆண்டும் நடக்கும் எந்த அறிகுறிகளும் பி.சி.சி.ஐ தரப்பிலிருந்து வெளிப்படவில்லை. இதனால் கொதித்துப் போன முன்னாள் வீரர்களும், ரஞ்சி வீரர்களும் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்த, பி.சி.சி.ஐ இறங்கி வந்து, ரஞ்சி தொடர் பிப்ரவரி 17 முதல் மார்ச் 12 வரையில் ஒரு கட்டமாகவும், அடுத்து ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் ஜூன் 6 ஆரம்பித்து இறுதிபோட்டி ஜூலை 22 தொடங்கும் எனவும் அறிவித்தது.

இதன்படி 87வது ரஞ்சி தொடர் பிப்ரவரி 17 ஆரம்பித்து கால் இறுதிக்கு முந்தைய போட்டிகள் வரை மார்ச் 12 வரையில் நடத்தி முடிக்கப்பட்டு, இதற்கடுத்து நான்கு காலிறுதிகளுக்குத் தகுதி பெற்ற அணிகளைக் கொண்டு காலிறுதி போட்டிகள் இந்த மாதம் ஜூன் 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

பெங்கால், ஜார்க்கன்ட் அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிய, பெங்கால் அணி முதல் இன்னிங்ஸ் அதிக ரன் எடுத்த அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது. அடுத்து மும்பை அணி உத்ரகாண்ட்டையும், உத்திரப் பிரதேஷ் கர்நாடகாவையும், மத்திய பிரதேஷ் பஞ்சாப்பையும் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

அடுத்து முதல் அரையிறுதி போட்டியில் மத்தியப் பிரதேஷ் பெங்கால் அணிகள் மோதிய போட்டியில், மத்தியப்பிரதேஷ் 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றது. இன்னொரு அரையிறுதி போட்டியில் மும்பை உத்திரப்பிரதேஷ் அணிகள் மோதிய போட்டி டிராவாக, முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த காரணத்தால், மும்பை அணியாக இரண்டாவது அணியாக இறுதிபோட்டிக்குத் தகுதி பெற்றது.

நேற்று ரஞ்சி தொடரின் இறுதிபோட்டி மும்பை, மத்தியப் பிரதேஷ் அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் பிரித்வி ஷா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி மும்பைக்குத் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய கேப்டன் பிரித்வி ஷா 47, ஜெய்ஸ்வால் 78 என்று, முதல் விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தையே தந்தனர். ஆனால் இவர்களுக்குப் பிறகு களமிறங்கிய எந்த மும்பை பேட்ஸ்மேன்களும் சுமாராகக் கூட விளையாடவில்லை. ஆனால் சர்ப்ராஸ்கான் விதிவிலக்கு. நேற்று முதல் நாள் ஆட்டம் முடிந்த போது அரைசதம் அடித்திருந்த அவர் இன்று தொடர்ந்து விளையாடி அற்புதமான சதத்தைப் பதிவு செய்தார். இறுதியாக சர்ப்ராஸ்கான் 134 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தத் தொடரில் அவரது நான்காவது சதம் இதுவாகும். இதற்கு முன்பு இந்த வருட ரஞ்சி சீசனின் ஏழு போட்டிகளில் வரிசையாக 275, 63, 48, 165, 153, 40, 59 என விளாசி இருந்தார். இந்தச் சதத்தோடு 937 ரன்களை குவித்து, இந்த சீசனில் அதிக ரன்களை குவித்தவர் ஆகியிருக்கிறார். மேலும் இதற்கு முந்தைய கடைசி ரஞ்சி தொடரிலும் முச்சதம், இரட்சை சதம், சதம் என அமர்க்கப்படுத்தி இருந்தார். இந்திய கிரிக்கெட் தேர்வாளர்கள் மீது தன் சிறப்பான ஆட்டத்தால் தன் பங்கிற்கு ஒரு அழுத்தத்தை ஏற்றி இருக்கிறார்!