கேட்ச் பிடித்தப் பின் பந்தை தரையில் நழுவ விடுவதைப் போல நடித்த ரியான் பராக் – காரணம் இது தான்

0
3611
Riyan Parag acting like drop catch

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின், டபுள் ஹெட்டர் போட்டி நாளின் இரண்டாவது போட்டியில், ப்ளேஆப்ஸ் வாய்ப்பை உறுதி செய்ய சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல் அணியும், கே.எல்.ராகுலின் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

லக்னோ அணி விளையாடிய 12 ஆட்டங்களில் 8 ஆட்டங்களை வென்று, 16 புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திலும், ப்ளே-ஆப்ஸ் சுற்றின் விளிம்பிலும் இருந்தது. ராஜஸ்தான் அணி விளையாடிய 12 ஆட்டங்களில் 7 ஆட்டங்களில் வென்று, 14 புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தது. இந்தப் போட்டியில் வெல்வது ராஜஸ்தான் அணிக்கு முக்கியமான ஒன்று !

முதலில் டாஸில் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் பேட் செய்யும் அணிகள் தொடரின் இரண்டாம் பாதியில் வென்று வருவதை கவனத்தில் கொண்டு, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிக ரன் அடித்தவர்களுக்காக ஆரஞ் கேப் வைத்திருக்கும் ஜோஸ் பட்லர் சீக்கிரத்தில் வெளியேறினார். ஆனால் ஜெய்ஷ்வால் 41 [28], சஞ்சு சாம்சன் 32 [24], படிக்கல் 39 [18] என்று சராசரியான பங்களிப்பைத் தரவும், இறுதி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் டிரென்ட் போல்ட் 9 பந்துகளில் 17 ரன்களை அடிக்க, இருபது ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 178 ரன்களை எடுத்தது.

அடுத்து 179 என்று களமிறங்கிய லக்னோ அணிக்கு குயின்டன் டிகாக், ஆயுஷ் பதோனியே அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார் டிரெண்ட் போல்ட். பிரசித் கிருஷ்ணா கேப்டன் கே.எல்.ராகுலை வெளியேற்ற, நெருக்கடியில் விழுந்தது லக்னோ அணி. ஆனால் இதற்குப் பிறகு இணைந்த தீபக் ஹூடா, க்ரூணால் பாண்ட்யா சரிவிலிருந்து அணியை சிறப்பாக மீட்டனர். ஆனால் க்ரூணால் பாண்ட்யா அஷ்வினிடம் 25 [13], தீபக் ஹூடா சஹலிடம் 59 [39] என்று வீழ, மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கியது லக்னோ அணி.

இறுதி நேரத்தில் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் இருந்தாலுமே, அவரால் தோல்விக்கான வித்தியாசத்தைக் கூட பெரிதாய் குறைக்க முடியவில்லை. ஆட்டத்தில் மெக்காய் வீசிய 19வது ஓவரின் மூன்றாவது பந்தை, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் தூக்கியடிக்க, லாங்-ஆனில் இருந்த ரியான் பராக் டைவ் அடித்து பிரமாதமாய் பிடித்து, ஆனந்தமாய் கொண்டாடினார். ஆனால் ரீ-ப்ளேவில் பார்த்த பொழுது, பந்து தரையில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. மூன்றாவது நடுவர் நாட் என அறிவித்தார்.

ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா அடுத்து வீசிய 20வது ஓவரின் இரண்டாவது பந்தை, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மீண்டும் லாங்-ஆனில் தூக்கியடிக்க, இந்த முறை அதை எளிதாய் பிடித்த ரியான் பராக், பிடித்த பந்தை தரையில் வைப்பதுபோல் பாவனை செய்து, பின்பு பந்து இந்த முறை தரையில் படவில்லை, சரியாகப் பிடித்துவிட்டேன் என்பதைப் போல செய்தார். இது லக்னோ அணி இரசிகர்களுக்கு எரிச்சலைக் கிளப்பி இருந்தாலும், ராஜஸ்தான் அணி இரசிகர்களுக்குப் பெரிய கொண்டாட்டமாகவே அமைந்தது!