டிம் டேவிட் பேட்டில் உரசிச் சென்ற பந்திற்கு ரிவ்யூ எடுக்காமல் போனதற்கு இதுதான் காரணம் ; கேப்டன் ரிஷப் பண்ட் பதில் – வீடியோ இணைப்பு

0
3222
Rishabh Pant about not taking review for Tim David

2022 ஐபிஎல் தொடர் பரபரப்பான கடைசி கட்டத்தை அடைந்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4வது அணியைத் தீர்மானிக்கும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. மும்பை – டெல்லி அணிகள் மோதிய இப்போட்டியில் மும்பை வென்றால் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இல்லையெனில் ரன் ரேட் அடிப்படையில் டெல்லி அணி அந்த இடத்திற்கு நகர்ந்துவிடும். அனைத்து பெங்களூர் வீரர்களும் மும்பை அணியின் வெற்றியை எதிர்கொண்டு காத்திருந்தனர்.

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச முடிவு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் டெல்லி அணி தட்டுத் தடுமாறி 159 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அதிரடி வீரர் பாவல் 43 ரன்களும் கேப்டன் பண்ட் 39 ரன்களும் அடித்தனர். தொடக்கத்தில் மும்பை அணி மிக மெதுவாக ஆடியது. இடையில் கிஷன் – பிரீவிஸ் 7 சிக்ஸர்கள் மற்றும் ஒரு சில பவுண்டரிகள் விளாசி ஸ்கோரை உயர்த்தினர். 34 பந்தில் 65 ரன்கள் தேவைப்பட்ட போது பேபி ஏபி பிரீவிஸ் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

அடுத்ததாக சிங்கப்பூரைச் சேர்ந்த அதிரடி மன்னன் டிம் டேவிட் களமிறங்கினார். வந்த முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்தப் பந்திற்கு நடுவரும் அவுட் வழங்கவில்லை டெல்லி கேப்டன் பண்ட்டும் ரிவ்யூ கேட்கவில்லை. தாக்கூர் வீசிய 14வது ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட டேவிட்டின் பேட்டில் பந்து உரசி சென்றதை அல்ட்ரா எட்ஜ் டெக்னாலஜி தெளிவாக காட்டியது. முக்கியமான போட்டியில் அதுவும் கையில் ரிவ்யூ வைத்திருந்தும் அதை பயன்படுத்தாதது மிகவும் மோசமான ஓர் செயல்.

போட்டி முடிந்தப் பின் இது குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் பேசியுள்ளார். “ டேவிட்டின் பேட்டில் பந்து உரசியது என எனக்கு அப்போதே தோன்றியது. ஆனால் அருகில் இருந்த வீரர்கள் யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் தான் நான் ரிவ்யூ எடுக்கவில்லை. ” என்றார். ஒரு கேப்டனாக பண்ட் செய்த இந்த செயல் பாராட்டக் கூடிய ஒன்று அல்ல. கிட்டத்தட்ட நாக் போட்டியை விளையாடுவது போல் சற்று கூடுதல் பொறுப்புடன் ஆடி ஜெயிக்க வேண்டிய இப்போட்டியை டெல்லி அணி தவறவிட்டுள்ளது.

டெல்லி அணி செய்த இந்த தவறை பயன்படுத்தி டிம் டேவிட் வான வேடிக்கைகள் காட்டினார். 11 பந்தில் 2 பவுண்டரி & 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 34 ரன்கள் சேர்த்து மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தார். மும்பை அணியின் இந்த வெற்றி மூலம் 8வது முறையாக பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.