ரஷித் கான் வீசிய சுழல் வலையில் சிக்கிய பாபர் அசாம் – வீடியோ இணைப்பு

0
96
Rashid Khan Picking Babar Azam Wicket

தற்போதைய உலகின் சிறந்த ஸ்பின் பவுலர் யார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ரஷித் கானின் பெயரை சொல்லி விடலாம். கடந்த ஐந்து ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் மற்றும் லீக் கிரிக்கெட் தொடர்களில் தன்னுடைய சுழற்பந்து வீச்சின் மூலம் பல பேட்டிங் வீரர்களை திக்குத் தெரியாமல் முழிக்க வைத்துள்ளார் ரசித் கான். உலகின் சிறந்த லீக் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரில் கால் பதித்தது முதல் இன்றுவரை அத்தனை சிறந்த பேட்டிங் வீரர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். அதனால் இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணி கண்ணை மூடிக்கொண்டு நிச்சயமாக இவரை தக்கவைத்துக் கொள்ளும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த ரஷித் கான் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி நேற்று பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடர்ந்து 3 வெற்றிகளை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது. ஆப்கானிஸ்தான் அணி இறுதி வரை போராடினாலும் 19வது ஓவரில் அசிப் அலி அடித்த நான்கு சித்தர்களால் ஆட்டத்தை பறிகொடுத்தது. நேற்றைய ஆட்டம் சற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றதற்கு காரணம் ரஷித் கான் வீசிய 4 ஓவர்கள் ஆகும்.

மேலும் பாகிஸ்தான் அணியின் பிரதான பேட்டிங் வீரரான அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமை, ரஷித் கான் வெளியேற்றியது தான் நேற்றைய ஆட்டத்தின் ஹைலைட். ஆட்டம் ஆப்கானிஸ்தான் கையைவிட்டு சென்றுகொண்டிருந்தபோது அற்புதமாக ஒரு கூக்ளி பந்தை வீசி பாபர் அசாமின் விக்கெட்டை கைப்பற்றினார் ரஷித் கான். இருந்தாலும் 19வது ஓவரில் கரிம் ஜனத் பந்துவீச்சை பாகிஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆசிப் அலி சிறப்பாக விளையாடி ஆட்டத்தை பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக முடித்து கொடுத்தார்.

ஆப்கானிஸ்தான் அணி ஆட்டத்தில் தோல்வியுற்று இருந்தாலும் அந்த அணி வெளிப்படுத்திய போராட்ட குணம் மிகவும் பாராட்டுகளை பெற்றது. இந்த தொடரில் நடக்கும் பல ஆட்டங்கள் ஒருதலைப்பட்சமாகவே சென்று கொண்டிருக்கும் போது நேற்று சிறப்பான திரில்லர் விருந்து ரசிகர்களுக்கு கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் ரஷித் கானின் பந்துவீச்சு ஆகும். நேற்றைய ஆட்டத்தில் ரஷித் கான் வீசிய கூக்ளி பந்துவீச்சில் பாபர் அசாம் ஆட்டமிழந்த வீடியோவை ரசிகர்கள் வெகுவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.